புதுச்சேரி : ஏழு அரசு துறை பணியிடங்களில் முன்தேதியிட்டு குரூப்-பி உள் ஒதுக்கீடு அமல்படுத்துவது சம்பந்தமாக அரசு இன்னும் முடிவெடுக்காமல் உள்ளதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர்.புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து,நிர்வாக சீர்த்திருத்த துறை அடுத்தடுத்து வேலைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.இதுவரை அறிவிப்பு வெளியிட்ட 2400 அரசு பணியிடங்களில் 1200 பணியிடங்களை அரசு நிரம்பிவிட்டது. மீதமுள்ள பணியிடங்களை போட்டி தேர்வு நடத்த நிர்வாக சீர்த்திருத்த துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது.அடுத்து, நடக்க உள்ள காவல் துறையின் ஊர்க்காவல் படை ஆண்கள், பெண்கள் வீரர்கள், கூட்டுறவு துறையின் ஜூனியர் இன்ஸ்பெக்டர், திட்ட ஆய்வாளர், தீயணைப்பு துறை நிலைய அதிகாரி மற்றும் தீயணைப்பு வீரர் ஓட்டுநர் கிரேடு-3 பணியிடங்களுக்கு கூட உத்தேச அட்டவணை வெளியிட்டுள்ளது.ஆனால், 2023ம் ஆண்டிற்கு முன் விண்ணப்பம் பெற்ற தொழில் துறையின் டெக்னிக்கல் ஆபிசர், வேளாண் துறையின் வேளாண் அதிகாரி காவல் துறையின் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 7 அரசிதழ் பதிவு பெறாத பணியிடங் களுக்கு விண்ணப்பம் பெற்றும், அவை இறுதி செய்யப்பட்ட பிறகும் கூட இன்னும் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். காரணம் என்ன
பத்து ஆண்டுகளாக புதுச்சேரி அரசு பல பணி யிடங்களுக் எம்.பி.சி., இட ஒதுக்கீடு விடுபட்டது புயலை கிளப்பியது. குறிப்பாக குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களில் எம்.பி.சி., இட ஒதுக்கீடு விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசியல் கட்சிகள், போராட்டத்தினை அறிவித்துள்ளன. அதன் பிறகு குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு எம்.பி.சி., உள்ஒதுக்கீடும் வழங்கி, அதன்படி தான் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.இதே உள்ஒதுக்கீட்டினை 2023ம் ஆண்டிற்கு முன் விண்ணப்பம் பெற்ற இந்த ஏழு அரசு பணியி டங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன.இது தொடர்பாக சட்டத் துறையின் கருத்தினை கேட்ட புதுச்சேரி அரசு இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. குறிப்பாக முன் தேதியிட்டு உள்ஒதுக்கீட்டு அரசாணையை அமல்படுத்த முடியாது என்பதால் எந்த முடிவுக்கு வராமல் உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஏழு அரசு துறைகளில் விண்ணப்பம் பெற்றும் கூட போட்டி தேர்வு இன்னும் நடத்தாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது. உண்டா... இல்லையா...
குரூப் -பி பிரிவு அரசு பதிவு பெறாத பதவியாக உள்ளது. இது மத்திய பணி நியமன ஆணையத்தின் மூலமாக (யுபிஎஸ்சி) நிரப்பப்படுவதில்லை.புதுச்சேரி அரசு தான், மத்திய அரசு வகுத்த விதிமுறைகளை பின்பற்றி நிரப்புகிறது. எனவே இதற்கு அகில இந்திய இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனவே மாநில அரசு, இதில் தயக்கம் இல்லாமல் முன் தேதியிட்ட உள் ஒதுக்கீடு சம்பந்தமாக உண்டா அல்லது இல்லையா என்பதை உடனடியாக முடிவெடுத்து, போட்டி தேர்வுகளை நடத்த வேண்டும்.
தொழில் துறையில் 24 இல் 22 காலி
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் தொழில்துறையில் மொத்தம் 24 டெக்னிக்கல் ஆபிசர் பணியிடங்கள் உள்ளன. இதில் 22 காலியாக உள்ளது. வேறு துறையில் இருந்து இரண்டு டெக்னிக்கல் ஆபிசரை கடன் வாங்கி சமாளித்து வருகின்றது. உள்ஒதுக்கீடு விஷயத்தில் காலதாமதம் ஆவதால் தொழில் துறையில் பணியில் உள்ள சொற்ப அதிகாரிகளுக்கும் பணிக்சுமை கூடியுள்ளது. தொழிற்சாலைகளின் உற்பத்தியாகும் மூலப்பொருள்களை தர ஆய்வு செய்வது, மானியம் கேட்டு விண்ணப்பிக்கும் தொழிற்சாலைகளை அணுகி ஆய்வு நடத்துவது, உள்ளூர், வெளி மாநில கண்காட்சிகளை ஒருங்கிணைப்பது என ஏகப்பட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி மீதமுள்ள 6 அரசு துறைகளிலும் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.