எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் பென்ஷன் உயர்த்தப்படுமா? சட்டசபை இன்று கூடுவதால் எதிர்பார்ப்பு
மத்திய அரசுக்கு சென்ற பரிந்துரை என்ன
சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும்போது தற்போது எம்.எல்.ஏ.,க்கள் தினசரி படியாக ரூ.500 பெறுகின்றனர். இதனை காலத்திற்கேற்ப ரூ.1,000 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் மருத்துவ வசதிக்கான கூடுதல் சலுகைகள் இல்லை. குரூப்-1 அதிகாரிக்கு இணையான மருத்துவ வசதிகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, தனியார் மருத்துவமனைகளில் மேல் சிகிச்சை பெற்றாலும் குறிப்பிட்ட தொகை மட்டுமே தரப்படுகிறது. முழு மருத்துவ செலவையும் வழங்க வேண்டும் என முன்மொழியப்பட்டது. அதேபோல், தொகுதிபடியை ரூ.5 ஆயிரத்தை ரூ.25 ஆயிரமாகவும், தொலைபேசி தொகை ரூ 7,500 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, செப். 18-நீண்ட காலமாக ஏற்றாமல் உள்ள சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். புதுச்சேரியில், எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் கடந்த 2010ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இதர படிகள் சில உயர்த்தப்பட்டாலும், சம்பளம் உயர்த்தப்படவில்லை. இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க கடந்த 2022ம் ஆண்டு அமைக்கப்பட்ட அப்போதைய எம்.எல்.ஏ., அசோக்பாபு தலைமையிலான கமிட்டி, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுத்தது. கேபினெட்டில் வைத்து, கவர்னர் ஒப்புதலுடன் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம், பென்ஷன் உயர்த்தப்படவில்லை. பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம், இன்னும் அனுமதி தரவில்லை. இன்று சட்டசபை கூடுகின்ற நிலையில் சம்பளம், பென்ஷன் உயர்த்துவதற்கான அறிவிப்பினை முதல்வர் ரங்கசாமி வெளியிடுவாரா என, மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இந்த பென்ஷன் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது தொடர்பாக சபாநாயகர் செல்வத்திடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் கூறுகையில், 'பிற மாநிலங்களை காட்டிலும் புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம் குறைவு. அடிப்படை ஊதியம் ரூ.8,000. இதர படிகளை சேர்த்து மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். வருமான வரி பிடித்தம் போக கையில் ரூ.45 ஆயிரம் கிடைக்கின்றது. கர்நாடகா, தமிழ்நாடு, டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது மிக குறைவு. தமிழக எம்.எல்.ஏ.,க்களின் அடிப்படை ஊதியம் ரூ.30 ஆயிரமாக உள்ளது. இதர படிகளை சேர்த்து ரூ.1.05 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். ஆனால், புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம் ரூ.50 ஆயிரம் வாங்குகின்றனர். அதில் பாதியான ரூ.25 ஆயிரத்தை முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பென்ஷன் பெற்று வருகின்றனர். சம்பளத்தை எதிர்பார்க்காமல் மக்கள் பணியில் ஒரு காலத்தில் இருந்தோம். ஆனால் இன்று அப்படி இல்லை. வயோதிக நிலையில், பல்வேறு நோய்களுடன் அவதிக்குள்ளாகி வருகிறோம். மருந்துவ செலவிற்கு பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளோம். தொடர்ந்து மக்கள் பணியாற்றவும், சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க செலவுகள் அதிகரித்து வருகிறது. தற்போதைய ஓய்வூதியத்தை உயர்த்துவது மிகவும் அவசியம். இதனால் ஒட்டுமொத்தமாக முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். மேலும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு என சட்டசபையில் தனி அலுவலகம் அமைக்க வலியுறுத்தியுள்ளாம். இந்த கோரிக்கைகளை முதல்வரும், சபாநாயகரும் வரும் சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம் என்றனர்.