உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டுபிடிக்கும் பணி... தீவிரம்; வீடு, வீடாக சுத்திகரித்த குடிநீர் வழங்க ஏற்பாடு

குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டுபிடிக்கும் பணி... தீவிரம்; வீடு, வீடாக சுத்திகரித்த குடிநீர் வழங்க ஏற்பாடு

புதுச்சேரி: புதுச்சேரியில் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டுபிடிக்கும் பணியை பொதுப்பணித்துறை, தீவிரப்படுத்தியுள்ளது. புதுச்சேரியில், பொதுப்பணித்துறை சார்பில், வழங்கப்படும் குடிநீர் தரமில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்நிலையில், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் தொகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இருப்பினும், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த 5ம் தேதி உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் கலங்கலான குடிநீரை குடித்த 20க்கும் மேற்பட்டோர் வயிற்று போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதே பகுதியில் கடந்த 7 ம் தேதி 70க்கும் மேற்பட்டோர் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், கோவிந்த சாலை பகத்சிங் வீதி, பூசைமுத்து,43; காமராஜ் வீதி பார்வதி,65; பாரதிபுரம் மெயின்ரோடு கோவிந்தசாமி,70; ஆகியோர் இறந்தனர். அதில் ஆவேசமடைந்த நேரு எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டார். தொடர்ந்து நேற்று தி.மு.க.,வினர் முற்றுகையிட் டனர். தொடர் போராட்டங்களை தொடர்ந்து, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள், வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குடிநீரில் எங்கு, எப்படி கழிவு நீர் கலக்கிறது என ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், நேற்று வரை கழிவு நீர் கலக்கும் இடத்தை கண்டுபிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று உருளையன்பேட்டை தொகுதியில் நேரு எம்.எல்.ஏ., முன்னிலையில் கமிஷனர் கந்தசாமி மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து முத்தரையர்பாளையத்தில் இருந்து வரும் குடிநீர் குழாய்களை கோவிந்தசாலை ராஜிவ்காந்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதி, சாரம் சக்தி நகர், சக்தி நகரில் உட்புற சாலைகளில் 3 இடங்கள், அவ்வை திடலில் 2 இடங்களில் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி குடிநீர் குழாய்களில், எங்கு கழிவு நீர் கலக்கிறது என சோதனை செய்து வருகின்றனர். இப்பணிக்காக சக்தி நகர், கோவிந்தசாலை பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டது. அதனையொட்டி, டேங்கர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. நேற்று உருளையன்பேட்டை தொகுதியில் துப்புரவு பணியாளர்கள் தீவிர துாய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து, கிருமி நாசினியான பிளிச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று ஓ.ஆர்.எஸ்., (உப்பு நீர் ) கரைசல் வழங்கினர். மேலும், வயிற்று போக்கு தாக்கம் உள்ளதா என்பது குறித்தும், நோய் தாக்கம் உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரச்னைக்கு விரைவில் தீர்வு

பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வயிற்று போக்கினால் பாதிக்கப்பட்ட சக்தி நகர், கோவிந்தசாலை, முடக்கு மாரியம்மன் கோவில் வீதி, பிள்ளைத் தோட்டம், நேரு நகர், லெனின் வீதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரை மூன்று வேலை பரிசோதித்து ஆய்வறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை குடிநீரில் குளோரின் அளவை அதிகரித்து, மேலும் இந்த பாதிப்பு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இப்பிரச்னை தீர்க்கப்படும். அதுவரையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தினசரி 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இன்று (10ம் தேதி) முதல் வழங்கவும், மேலும், தேவைப்படும் பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram
செப் 10, 2025 09:15

மக்களின் அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்யாமல் கமீஸின் அடிக்கும் இவர்கள் என்ன ஜென்மங்கள் …


புதிய வீடியோ