பாட்மின்டன் கமிஷனில் சிந்து
புதுடில்லி: பாட்மின்டன் கூட்டமைப்பு தடகள கமிஷன் தலைவராக இந்தியாவின் சிந்து தேர்வு செய்யப்பட்டார். இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து 30. ஒலிம்பிக்கில் இரு பதக்கம் (2016ல் வெள்ளி, 2021ல் வெண்கலம்) வென்றுள்ளார். சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பின் (பி.டபிள்யு.எப்.,) தடகள கமிஷன் உறுப்பினராக, கடந்த 2017 முதல் இருந்து வருகிறார். தவிர பி.டபிள்யு.எப்., ஒருங்கிணைப்பு துாதராக 2020 முதல் உள்ளார்.தற்போது 2026 முதல் 2029 வரையில், பி.டபிள்யு.எப்., தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் டேபோரா ஜில்லி, சிந்துவுக்கு துணை தலைவராக செயல்படுவார்.பாட்மின்டன் நட்சத்திரங்களின் நலன்கள், சர்வதேச போட்டிகளில் நடக்கும் விஷயங்கள், போட்டி குறித்த விதிகள் குறித்து, பி.டபிள்யு.எப்., கவுன்சிலுக்கு இவர்கள் ஆலோசனை வழங்குவர். இதுகுறித்து சிந்து கூறுகையில்,'' சக விளையாட்டு நட்சத்திரங்களால் இந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது பெருமை. இதை பணிவு, நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன். கடந்த முறை சிறப்பாக செயல்பட்ட கிரேசியாவுக்கு பாராட்டுகள். வியக்கத்தக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நன்றாக செயல்பட முயற்சிப்பேன்,'' என்றார்.