லக்சயா சென் சாம்பியன்: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்
சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லக்சயா சென் 24, ஜப்பானின் யூஷி டனாகா 26, மோதினர். முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய லக்சயா, 2வது செட்டை 21-11 என தன்வசப்படுத்தினார்.மொத்தம் 38 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய லக்சயா 21-15, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். நடப்பு ஆண்டில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றிய லக்சயா, கடைசியாக கடந்த ஆண்டு லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச தொடரில் ('சூப்பர் 300') கோப்பை வென்றிருந்தார்.தவிர, நடப்பு சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற 2வது இந்தியரானார். சமீபத்தில் முடிந்த யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி கோப்பை வென்றிருந்தார்.லக்சயா சென் கூறுகையில், ''நடப்பு ஆண்டில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தேன். கடினமாக பயிற்சி மேற்கொண்டு நடப்பு சீசனில் முதல் பட்டம் வென்றதில் மகிழ்ச்சி,'' என்றார்.