உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சரிந்தது இந்திய பேட்டிங் * அபிஷேக் ஆறுதல் அரைசதம் * எளிதாக வென்றது ஆஸி.,

சரிந்தது இந்திய பேட்டிங் * அபிஷேக் ஆறுதல் அரைசதம் * எளிதாக வென்றது ஆஸி.,

மெல்போர்ன்: மெல்போர்ன் 'டி-20' போட்டியில் இந்திய பேட்டர்கள் கைவிட, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அபிஷேக் 68 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இரண்டாவது போட்டி நேற்று மெல்போர்னில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ், பீல்டிங் தேர்வு செய்தார். அதிர்ச்சி துவக்கம்இந்திய அணிக்கு சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி அதிர்ச்சி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை ஹேசல்வுட் வீசினார். பவுன்சராக வந்த 3வது பந்து சுப்மன் 'ஹெல்மெட்' முன் பகுதியில் பலமாக தாக்கியது. அடுத்து வந்த பார்ட்லெட் ஓவரில் அபிஷேக், ஒரு பவுண்டரி, சிக்சர் விளாச, மொத்தம் 17 ரன் கிடைத்தன. இம்மகிழ்ச்சி சில நிமிடம் கூட நிலைக்கவில்லை. ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் சுப்மன் (5), மார்ஷிடம் 'கேட்ச்' கொடுத்தார். 3வது வீரராக களமிறங்கினார் சஞ்சு சாம்சன். 4 பந்தில் 2 ரன் மட்டும் எடுத்து, நாதன் எல்லிஸ் பந்தில் அவுட்டானார். மீண்டும் வந்த ஹேசல்வுட், வீசிய 'அவுட் சுவிங்' பந்தில், கேப்டன் சூர்யகுமார் (1) நடையை கட்டினார். அடுத்த 2வது பந்தில் திலக் வர்மாவும் 'டக்' அவுட்டானார். இந்திய அணி 4.5 ஓவரில் 32/4 ரன் என திணறியது. ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் எல்லிஸ், ஹேசல்வுட் பந்துகளை அபிஷேக் பவுண்டரிக்கு விரட்டினார். பின் வந்த அக்சர் படேல் (7), மூன்றாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு வீணாக ரன் அவுட்டானார். அபிஷேக் அரைசதம்ஷிவம் துபேவுக்கு முன்னதாக வந்தார் ஹர்ஷித் ராணா. குனேமன், ஸ்டாய்னிஸ் பந்துகளில் பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். மறுபக்கம் அபிஷேக், 23 பந்தில் அரைசதம் அடித்தார். சர்வதேச 'டி-20'ல் இது இவரது 6வது அரைசதம். ஸ்டாய்னிஸ் பந்தில் ஹர்ஷித் சிக்சர் அடிக்க, இந்திய அணி 15 ஓவரில் 105/5 ரன்களை எட்டியது. 16 வது ஓவரை வீசிய பார்ட்லெட், 2வது பந்தில் ஹர்ஷித்தை (35) வெளியேற்றினார். வந்த வேகத்தில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷிவம் துபே (4), அடுத்த பந்தில் அவுட்டானார். மீண்டும் வந்த பார்ட்லெட் ஓவரில் அபிஷேக், 4, 6 என அடுத்தடுத்து விளாச, 15 ரன் கிடைத்தன. இவர் 37 பந்தில் 68 ரன் எடுத்த போது, எல்லிஸ் பந்தில் அவுட்டானார். கடைசியில் பும்ரா (0) ரன் அவுட்டானார். இந்திய அணி 18.4 ஓவரில் 125 ரன்னில் ஆல் அவுட்டானது. ஹேசல்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார். மிட்சல் விளாசல்எளிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது, ஹெட் (28), வருண் சுழலில் சிக்கினார். 26 பந்தில் 46 ரன் எடுத்த மார்ஷ், குல்தீப் பந்தில் வீழ்ந்தார். டிம் டேவிட் (1), இங்லிஸ் (20), ஓவன் (14), ஷார்ட் (0) என அடுத்தடுத்து அவுட்டான போதும், ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் 126/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா 0-1 என தொடரில் பின்தங்கியது. இந்தியா சார்பில் பும்ரா, குல்தீப், வருண் தலா 2 விக்கெட் சாய்த்தனர். 9 பேட்டர்கள்இந்திய அணியில் நேற்று அபிஷேக் (68), ஹர்ஷித் (35) தவிர மற்ற 9 பேட்டர்கள் யாரும், ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை.13வது முறை'டி-20' அரங்கில் இந்திய அணி நேற்று 13வது முறையாக ஆல் அவுட்டானது. இதற்கு முன் 2024 உலக கோப்பை தொடரில் இதுபோல நடந்தது.23 பந்தில்...ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 'டி-20'ல் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த இந்திய வீரர்களில் முதலிடத்தை, சூர்யகுமாருடன் (2022, 'டி-20' உலக கோப்பை, எதிர்-ஜிம்பாப்வே), பகிர்ந்து கொண்டார் அபிஷேக். இருவரும் தலா 23 பந்தில் அரைசதம் அடித்தனர்.37 போட்டிஇந்திய அணியில் கடந்த 2019 முதல் ஷிவம் துபே விளையாடிய 37 'டி-20' போட்டியிலும் இந்தியா தோற்காமல் வலம் வந்தது. நேற்று 38 வது போட்டியில் இந்தியா முதன் முறையாக தோற்றது. இந்த வரிசையில் உகாண்டா வீரர் பாஸ்கல் முருங்கி (2022-2024ல் 27 போட்டி), இந்தியாவின் பும்ரா (2021-2025ல் 24) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.இது மோசம்'டி-20' ல் அதிக பந்து மீதம் உள்ள நிலையில் இந்திய அணி (40 பந்து) தோற்ற வரிசையில், நேற்றைய போட்டி 2வது இடம் பிடித்தது. முன்னதாக 2008ல் 52 பந்து மீதம் உள்ள போது, ஆஸ்திரேலியாவிடம் (மெல்போர்ன்) தோற்றது முதலிடத்தில் உள்ளது.82,438 பேர்மெல்போர்னில் நேற்றைய போட்டியை காண மொத்தம் 84,438 பேர் திரண்டனர்.வீரர்கள் அஞ்சலிஆஸ்திரேலிய இளம் வீரர் பென் ஆஸ்டின் 17, பயிற்சியின் போது பந்து கழுத்தில் தாக்கி மரணம் அடைந்தார். நேற்றைய போட்டிக்கு முன், இவர் அணிந்த தொப்பியை வைத்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணியினர் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை