பிரதோஷ், பூபதி அரைசதம் * தமிழக அணி ரன் குவிப்பு
கோவை: மும்பை அணிக்கு எதிராக புச்சி பாபு லீக் போட்டியில் தமிழக லெவன் அணி முதல் நாளில் 294/5 ரன் குவித்தது. பிரதோஷ், பூபதி, இந்திரஜித் அரைசதம் விளாசினர். தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கோவையில் நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழக கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) லெவன், மும்பை அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்று களமிறங்கிய தமிழக லெவன் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 294/5 ரன் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் (61), பிரதோஷ் ரஞ்சன் (65), பூபதி (63) அரைசதம் அடித்து கைகொடுத்தனர். சித்தார்த் 'ஐந்து'சேலத்தில் நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில் டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன், குஜராத் மோதுகின்றன. 'டாஸ்' வென்று களமிறங்கிய குஜராத் அணி முதல் நாள் முடிவில் 321/7 ரன் குவித்தது. ஜெய்மீட் படேல் (125) அவுட்டாகாமல் இருந்தார். பிரசிடென்ட் லெவன் வீரர் சித்தார்த் 5 விக்கெட் சாய்த்தார். திருநெல்வேலியில் நடக்கும் 'ஏ' பிரிவு போட்டியில் மத்திய பிரதேசம், ஐதராபாத் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் மத்திய பிரதேச அணி 207 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 52/0 ரன் எடுத்திருந்தது. திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் 'டி' பிரிவு போட்டியில் பரோடா, சத்தீஷ்கர் அணிகள் மோதுகின்றன. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்னதாக முடிவுக்கு வந்தது. பரோடா அணி முதல் இன்னிங்சில் 255/6 ரன் எடுத்திருந்தது.