இந்திய வீரர்கள் காயம் ஏன் * என்ன சொல்கிறார் கபில் தேவ்
கோல்கட்டா: ''ஆண்டுக்கு சுமார் 10 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்பதால், காயம் அடையும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது,'' என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. 2023 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் சாய்த்த ஷமி (24), பைனலுக்குப் பின் கணுக்கால் காயத்துக்கு ஆப்பரேஷன் செய்தார். 14 மாதம் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பும்ராவுக்கு சரியான 'கம்பெனி' கிடைக்காமல் போனது.10 ஆண்டுக்குப் பின் இந்தியா, தொடரை இழக்க நேரிட்டது. தவிர, சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட முதுகு வலி காரணமாக, பும்ரா பாதியில் விலகினார். தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்க முடியவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்கள் பயிற்சிக்காக செலவிடும் நேரத்தை விட, காயத்தில் இருந்து மீண்டு வரத் தேவையான பயிற்சியில் தான் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து 1983ல் இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ் 66, கூறியது:போட்டிகளில் வீரர்கள் காயமடைவது சகஜம் தான். ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆண்டுக்கு, சுமார் 10 மாதம் விளையாடுகின்றனர். இது தான் கவலை தருகிறது. பொதுவாக, அணியின் முன்னணி வீரர் காயமடைவதை யாரும் விரும்ப மாட்டார். ஆனால் இது நடந்து விட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. பாட்மின்டன், கோல்ப், டென்னிஸ் போல கிரிக்கெட் என்பது தனிநபர் விளையாட்டு அல்ல. இங்கு அனைவரும் இணைந்து விளையாட வேண்டும். முடிவில் சிறப்பாக செயல்படும் அணி தான் வெற்றி பெறும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணியாக இணைந்து அசத்தினால், உறுதியாக கோப்பை வெல்லலாம். தற்போதுள்ள இளம் வீரர்கள் தன்னம்பிக்கை, நம்பமுடியாத அளவுக்கு உள்ளது. நாங்கள் விளையாடிய காலத்தில் இதுபோல நம்பிக்கை இருந்தது இல்லை. இந்திய அணி சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.