சோகத்தில் மைக்கேல் கிளார்க்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 44. கடந்த 2015ல் இவரது தலைமையிலான அணி, உலக கோப்பை (50 ஓவர்) வென்றது. இதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2006ல் இவருக்கு தோல் புற்று நோய் (கேன்சர்) இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்குப் பின் மீண்டார். 2019ல் இவரது முன் தலை உட்பட 3 பகுதியில் இருந்து கேன்சர் அல்லாத திசுக்கள் அகற்றப்பட்டன. 2023ல் மார்புப் பகுதியில் இருந்த தோல் நீக்கப்பட்ட போது, 27 தையல் போடப்பட்டன. ஆறாவது முறையாக மூக்கில் இருந்த கேன்சர் தோலை அகற்றினார். இதுகுறித்து கிளார்க் கூறியது:கிரிக்கெட் வீரர்கள் வெயிலில் அதிக நேரம் நிற்பதால், தோல் கேன்சர் ஏற்படுகிறது. இந்தியா போன்ற அதிக வெப்பமான நாடுகளில் 8 மணி நேரம் பீல்டிங் செய்தால் என்ன ஆகும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். தலையில் தொப்பி அணிந்தாலும் முகம், காது, கைகளில் வெயில் படத் தான் செய்யும். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் வெயிலில் அதிகநேரம் இருந்துள்ளேன். இதில் இருந்து பாதுகாக்க, 'சன் ஸ்கிரீன் கிரீம்' எப்போதும் பூசிக் கொள்வேன். ஆனால் வியர்வையில் கரைந்து விடும். தற்போது தோல் கேன்சர் வந்து விட்டது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை டாக்டரிடம் சோதனை செய்ய வேண்டும். முகத்தில் பல்வேறு ஏழு முறை, திசுக்களை வெட்டி எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.