காஷ்மீர் அணி கலக்கல் ஆட்டம் * முதல் ரஞ்சி கோப்பை வெல்ல ரெடி
ஹப்பள்ளி: ரஞ்சி கோப்பையை முதன் முறையாக முத்தமிட உள்ளது காஷ்மீர் அணி. இன்னும் ஒருநாள் மீதமுள்ள நிலையில் 477 ரன் முன்னிலையுடன், ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரஞ்சி கோப்பை தொடரின் 91 வது சீசன் நடக்கிறது. கர்நாடகாவின் ஹப்பள்ளியில் நடக்கும் பைனலில், கர்நாடகா, காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் காஷ்மீர் அணி 584 ரன் குவித்தது. மூன்றாவது நாள் முடிவில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 220/5 ரன் எடுத்து, 364 ரன் பின்தங்கி இருந்தது. மயங்க் (130), கிருஷ்ணா (27) அவுட்டாகாமல் இருந்தனர்.நபி 'ஐந்து'நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. கிருஷ்ணா (36), வித்யாதர் (11) அவுட்டாகினர். மயங்க் அகர்வால் 160 ரன் எடுத்த நிலையில், அவுகிப் 'வேகத்தில்' வெளியேறினார். கடைசியில் பிரசித் கிருஷ்ணா (4) வீழ்ந்தார். கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 293 ரன்னில் ஆல் அவுட்டானது. அவுகிப் நபி 5 விக்கெட் சாய்த்தார். காஷ்மீர் முன்னிலைமுதல் இன்னிங்சில் 291 ரன் முன்னிலை பெற்ற உற்சாகத்தில் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது காஷ்மீர் அணி. யாவெர் (1), சுபம் (4), கேப்டன் பராஸ் டோக்ரா (16) விரைவில் திரும்பினர். அப்துல் சமத் 32 ரன் எடுக்க, இக்பால் அரைசதம் கடந்தார். நான்காவது நாள் முடிவில் காஷ்மீர் அணி, இரண்டாவது இன்னிங்சில் 186/4 ரன் எடுத்து, 477 ரன் முன்னிலை பெற்றிருந்தது. இக்பால் (94), சாஹில் (16) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. ஒருவேளை இன்று காலை காஷ்மீர் அணி 'டிக்ளேர்' செய்தால், 90 ஓவர்களில் கர்நாடக அணி இலக்கை எட்டுவது கடினம். போட்டி 'டிரா' ஆகலாம். இதனால் ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன் முறையாக இன்று காஷ்மீர் அணி சாம்பியன் ஆக காத்திருக்கிறது.