உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோல்கட்டாவில் உச்சகட்ட பாதுகாப்பு * முதல் டெஸ்ட் போட்டிக்கு

கோல்கட்டாவில் உச்சகட்ட பாதுகாப்பு * முதல் டெஸ்ட் போட்டிக்கு

கோல்கட்டா: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (காந்தி-மண்டேலா கோப்பை) பங்கேற்கிறது. முதல் போட்டி (நவ.14-18) மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு பின் இங்கு டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. கடைசியாக 2019ல் பகலிரவு டெஸ்ட் (எதிர், வங்கதேசம்) நடந்தது. போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கோல்கட்டா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,''ஈடன் கார்டன் மைதானம், இந்தியா, தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அச்சமில்லாமல் போட்டியை காண வேண்டும் என்பதே இலக்கு. பல கட்ட சோதனைகளுக்கு பின் அனுமதிக்கப்படுவர். இரு முறை 'மெட்டல் டிடெக்டர்' சோதனைகள் கடந்து தான் மைதானத்திற்குள் செல்ல முடியும். சந்தேகத்திற்குரிய பைகள், பொருள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் இருப்பர். சாதாரண உடை அணிந்த போலீசார் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபடுவர்,'' என்றார். ஆடுகளம் எப்படிசொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை (2024) இந்தியா முழுமையாக (0-3) இழந்தது. நியூசிலாந்தின் சான்ட்னர், அஜாஸ் படேல் 'சுழலில்' அசத்தினர். தற்போதைய தென் ஆப்ரிக்க அணியில் கேஷவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், சேனுரன் முத்துசாமி என 3 தரமான 'ஸ்பின்னர்'கள் உள்ளனர். இதனால் ஆடுகள விஷயத்தில் இந்திய அணி கவனமாக உள்ளது. ஈடன் கார்டன் ஆடுகளத்தில், முதல் இரு நாள் 'வேகம்' எடுபடும். போகப் போக 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம். பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி கூறுகையில்,''இந்தியா சார்பில் 'ஸ்பின்னர்'களுக்கு ஏற்ற ஆடுகளம் கேட்கவில்லை. ஆடுகளம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது,''என்றார்ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜி கூறுகையில்,''ஆடுகளம் பேட்டிங், பவுலிங் என இரண்டுக்கும் கைகொடுக்கும்,''என்றார்.காம்பிர், மார்கல், சுப்மன் கில் உள்ளிட்டோர் நேற்று ஆடுகளத்தை ஆய்வு செய்தனர். இவர்களுக்கு திருப்தி அளிக்காதது போல தெரிந்தது. கடந்த ஒரு வாரமாக தண்ணீர் தெளிக்கப்படாததால், வறண்டு போன ஆடுகளத்தில் லேசாக புற்கள் காணப்பட்டன. பந்துகள் 'ரிவர்ஸ் ஸ்விங்' ஆக வாய்ப்பு உள்ளது. இது, தென் ஆப்ரிக்க 'வேகங்கள்' ரபாடா, யான்செனுக்கு சாதகம். 'கோல்டு காயின்'கோல்கட்டா டெஸ்ட் போட்டிக்கான 'டாசின்' போது ஒரு பக்கம் மகாத்மா காந்தி, மறுபக்கம் நெல்சன் மண்டேலா படம் கொண்ட சிறப்பு 'கோல்டு காயின்' பயன்படுத்தப்படும் என பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி தெரிவித்தார்.பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய கேப்டன் சுப்மன் கில் நேற்று நீண்ட நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டார். ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் பந்துகளை 'ஸ்வீப் ஷாட்' அடித்தார். பவுலிங் பயற்சியாளர் மார்னே மார்கல் பந்தை 'த்ரோ' செய்ய, ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்தார். மூன்றாவது இடத்தை குறி வைக்கும் தமிழக வீரர் சாய் சுதர்சனும் பயிற்சியில் ஈடுபட்டார். டெஸ்டில் துருவ் ஜுரல், சராசரியாக 47.77 ரன் எடுத்து நல்ல 'பார்மில்' உள்ளார். கீப்பராக ரிஷாப் பன்ட் இருப்பதால், பேட்டராக மட்டும் ஜுரலை களமிறக்கும் திட்டம் உண்டு. இதனால் சுதர்சனுக்கு நெருக்கடி ஏற்படலாம். வலது முழங்காலில் 'ஸ்டிராப்' அணிந்திருந்த பும்ரா 'ஆப்-ஸ்டம்பை' நோக்கி பந்துவீசி, பயிற்சியில் ஈடுபட்டார். இதை பயிற்சியாளர் காம்பிர் கண்காணித்தார். இந்திய 'ஏ' அணிக்காக விளையாடிய ராகுல், துருவ் ஜுரல், சிராஜ், ஆகாஷ், தேவ்தத் படிக்கல், அக்சர் படேல் உள்ளிட்டோர் பயிற்சியை தவிர்த்தனர்.நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் பவுமா, மார்க்ரம், ரிக்கிள்டன் உள்ளிட்ட வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ