உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கடைசி ஓவரில் டில்லி வெற்றி: மும்பை அணி ஏமாற்றம்

கடைசி ஓவரில் டில்லி வெற்றி: மும்பை அணி ஏமாற்றம்

புதுடில்லி: கடைசி ஓவரில் அசத்திய டில்லி அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பிரேசர் விளாசல்

டில்லி அணிக்கு பிரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரெல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. லுாக் உட் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய பிரேசர்-மெக்குர்க் 15 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், ஹர்திக் பாண்ட்யா வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்த போது சாவ்லா 'சுழலில்' பிரேசர்-மெக்குர்க் (84 ரன், 6 சிக்சர், 11 பவுண்டரி) சிக்கினார்.அபிஷேக் (36), ஷாய் ஹோப் (41 ரன், 5 சிக்சர்) நம்பிக்கை தந்தனர். கேப்டன் ரிஷாப் பன்ட் (29) நிலைக்கவில்லை. அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லுாக் உட் வீசிய 18வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 26 ரன் விளாசினார். டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன் எடுத்தது. ஸ்டப்ஸ் (48), அக்சர் படேல் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரோகித் ஏமாற்றம்

சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா (8) ஏமாற்றினார். இஷான் கிஷான் (20), சூர்யகுமார் யாதவ் (26) சோபிக்கவில்லை. குல்தீப் யாதவ் வீசிய 9வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா (46) நம்பிக்கை தந்தார். வதேரா (4) சொதப்பினார். குல்தீப் வீசிய 15வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விரட்டிய திலக், லிசாட் வில்லியம்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 25 பந்தில் அரைசதம் எட்டினார். டிம் டேவிட் (37) ஆறுதல் தந்தார்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன் தேவைப்பட்டன. முகேஷ் குமார் பந்துவீசினார். முதல் பந்தில் 2வது ரன்னுக்கு ஓடிய திலக் (63) 'ரன்-அவுட்' ஆனார். அடுத்த 5 பந்தில் 13 ரன் மட்டுமே கிடைத்தது. மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன் எடுத்து தோல்வியடைந்தது.

அதிகபட்ச ஸ்கோர்

டில்லி அணி தனது அதிகபட்ச ஸ்கோரை (257/4) பதிவு செய்தது. இதற்கு முன் 231/4 ரன் (எதிர்: பஞ்சாப், 2011, இடம்: டில்லி) எடுத்திருந்தது.

15 பந்தில் அரைசதம்

அதிவேக அரைசதம் (15 பந்து) விளாசிய டில்லி வீரர்கள் வரிசையில் தனது சொந்த சாதனையை சமன் செய்தார் பிரேசர். சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக 15 பந்தில் அரைசதம் அடித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை