| ADDED : ஆக 12, 2024 10:56 PM
போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 357, வெஸ்ட் இண்டீஸ் 233 ரன் எடுத்தன. நான்காம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 30/0 ரன் எடுத்திருந்தது.ஐந்தாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (45), மார்க்ரம் (38) கைகொடுத்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (68) அரைசதம் விளாசினார். தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 173/3 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. கேப்டன் பவுமா (15) அவுட்டாகாமல் இருந்தார்.பின் 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 11/1 ரன் எடுத்திருந்த போது ஆட்டம் மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. கீசி கார்டி (31) ஆறுதல் தந்தார். அலிக் அதானஸ் 92 ரன் விளாசினார். ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 201/5 ரன் எடுத்திருந்தது. ஹோல்டர் (31), ஜோசுவா (2) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் கேஷவ் மஹாராஜ் விக்கெட் சாய்த்தார்.இதனையடுத்த போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் (4+4) சாய்த்த கேஷவ் மஹாராஜ், ஆட்ட நாயகன் விருது வென்றார். இரண்டாவது டெஸ்ட் ஆக. 15ல் கயானாவில் துவங்குகிறது.