ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி
புதுடில்லி: ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ரோகித், கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, மூன்று ஒருநாள், ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் அக். 19ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (அக். 23), சிட்னியில் (அக். 25) நடக்கவுள்ளன.ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், இரண்டு பிரிவுகளாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, கேப்டன் சுப்மன் கில், துவக்க வீரர் ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ், 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் ரெட்டி, வேகப்பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் சென்றனர்.பின் தலைமை பயிற்சியாளர் காம்பிர் உள்ளிட்டோர் சென்றனர். டில்லி விமான நிலையத்தில் கூடிய ரசிகர்கள், இந்திய வீரர்களை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.காம்பிர் கூறுகையில், ''உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அதற்குள் சிறந்த அணியை உருவாக்குவோம். ஆஸ்திரேலிய மண்ணில் சீனியர் வீரர்களின் செயல்பாடு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும். ரோகித், கோலிக்கு இது சிறந்த தொடராக அமையும்,'' என்றார்.