இந்திய பெண்கள் உலக சாம்பியன்: பார்வையற்றோர் டி-20 கிரிக்கெட்டில்
கொழும்பு: பார்வையற்றோர் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், 7 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன.இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தீபிகா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.நேபாள அணிக்கு பிமலா ராய் (26), சரிதா கிமிரே (35*) ஆறுதல் தந்தனர். நேபாள அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் ஜமுனா ராணி, அனு குமாரி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கருணா (42), புலா சரேன் (44*) கைகொடுத்தனர். இந்திய அண 12.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது.இத்தொடரில் இந்திய அணி 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஐந்து லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பைனலில் நேபாளத்தை வென்றது.