உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கைகொடுக்குமா அடிலெய்டு ஆடுகளம் * நாளை பகலிரவு டெஸ்ட் துவக்கம்

கைகொடுக்குமா அடிலெய்டு ஆடுகளம் * நாளை பகலிரவு டெஸ்ட் துவக்கம்

அடிலெய்டு: அடிலெய்டில் நாளை துவங்கும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம், பேட்டர்களுக்கு சவால் தர காத்திருக்கிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட், அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நாளை துவங்க உள்ளது. கடந்த 2020ல் இங்கு பகலிரவு டெஸ்டில் பங்கேற்ற இந்திய அணி, 36 ரன்னுக்கு சுருண்டது. இம்முறை இந்திய அணி மீண்டு வர முயற்சிக்கலாம். இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் டேமியன் ஹப் கூறியது:அடிலெய்டு ஆடுகளத்தில் வழக்கமாக மின்னொளியில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். இம்முறை ஆடுகளத்தில் 6 மி.மீ., உயரத்திற்கு புற்கள் உள்ளன. இதனால் காய்ந்த, கடின புற்கள் எப்போதும் இருக்கும். துவக்கத்தில் மட்டுமன்றி, போட்டி முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது கைகொடுக்கும். பந்துகள் நன்றாக பவுன்சர் ஆகும். இங்கு குறைந்த களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.பந்து பழையதாக மாறும் போது பேட்டர்கள் ரன் மழை பொழியலாம். சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்கலாம். எனினும் அடுத்தடுத்த நாளில் வழக்கம் போல, சுழற்பந்து வீச்சாளர்களும் விக்கெட் சாய்க்கலாம்.இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் முன்னணி சுழற்பந்து வீச்சாளரை அணியில் தேர்வு செய்ய வேண்டும். இதில் குழப்பம் இருக்கக் கூடாது. அவர்களால் மின்னொளியில் இங்கு நன்றாக செயல்பட முடியும். ஒருவேளை புதிய பந்தில் இரவில் பவுலிங் செய்யும் நிலை இருந்தால் ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக அமையும். இருப்பினும் கடந்த முறை போல, மூன்று நாளில் டெஸ்ட் முடிந்து விடாது. இவ்வாறு அவர் கூறினார். ரசிகர்களுக்கு மறுப்புஇந்திய வீரர்கள் பயிற்சியை, காண ரசிகர்களுக்கு முதலில் அனுமதி தரப்பட்டது. அடிலெய்டில் வலைக்கு அருகில் இருந்து வீரர்களை பார்க்கலாம் என்பதால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் நேற்று பயிற்சியை காண அனுமதி மறுக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் ஒருவர் கூறியது:ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியின் போது 70 பேர் தான் இருந்தனர். இந்திய வீரர்கள் வந்ததும், 3000 பேர் திரண்டனர். இவ்வளவு ரசிகர்கள் வருவர் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கோலி, சுப்மனை சூழ்ந்து கொண்டனர். சிலர் தங்கள் நண்பர்களுக்கு சமூக வலைதளம் வழியாக 'லைவ்' செய்கின்றனர். சப்தமாக பேசுகின்றனர். ரசிகர் ஒருவர், இந்திய வீரரிடம் குஜராத்தி மொழியில் 'ஹாய்' சொல்லுங்கள் என தொடர்ந்து தொல்லை தந்தார். மற்றொரு வீரரின் உடற்தகுதி குறித்தும் சிலர் மோசமாக 'கமெண்ட்' செய்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.ரிஷாப்பிற்கு பாராட்டுஇந்திய அணி முன்னாள் கேப்டன், பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில்,'' தோனிக்குப் பின் விக்கெட் கீப்பர் பேட்டராக யார் வரப் போகின்றனர் என நினைத்துப் பார்க்கவே கடினமாக இருந்தது. ஆனால் டெஸ்டில் ரிஷாப் பன்ட் செயல்பாடுகள் நம்ப முடியாத அளவுக்கு உள்ளன. பிரிஸ்பேன் டெஸ்டில் நெருக்கடியான, பரபரப்பான சூழலில் வியக்கத்தக்க வகையில் விளையாடினார். நீரில் நீந்தும் வாத்து போல, டெஸ்ட் போட்டிகளில் அசத்தலாக செயல்படுகிறார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை