ஜெமிமா சதம்: பைனலில் இந்தியா
நவி மும்பை: ஜெமிமா சதம் கைகொடுக்க, உலக கோப்பை பைனலுக்கு இந்திய பெண்கள் அணி ஜோராக முன்னேறியது. அரையிறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. இதன் பைனலுக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த 2வது அரையிறுதியில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா அணிகள் மோதின.லிட்ச்பீல்டு சதம்: 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி (5) ஏமாற்றினார். ஸ்ரீ சரணி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய லிட்ச்பீல்டு, 77 பந்தில் சதத்தை எட்டினார். அமன்ஜோத் கவுர் 'வேகத்தில்' லிட்ச்பீல்டு (119 ரன், 93 பந்து, 3x6, 17x4) போல்டானார். பொறுப்பாக ஆடிய பெர்ரி (77) அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய ஆஷ்லி கார்ட்னர் 45 பந்தில் 63 ரன் (4x6, 4x4) குவித்தார்.ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவரில், 338 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.ஜெமிமா அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷைபாலி வர்மா (10), ஸ்மிருதி மந்தனா (24) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அபாரமாக ஆடிய ஹர்மன்பிரீத், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 22வது அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன் சேர்த்த போது ஹர்மன்பிரீத் (89) அவுட்டானார்.தீப்தி சர்மா (24) 'ரன்-அவுட்' ஆனார். மறுமுனையில் அசத்திய ஜெமிமா, ஒருநாள் போட்டியில் தனது 3வது சதம் விளாசினார். ரிச்சா கோஷ், 16 பந்தில் 26 ரன் எடுத்தார். மோலினக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அமன்ஜோத் கவுர், வெற்றியை உறுதி செய்தார்.இந்திய அணி 48.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 341 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா (127), அமன்ஜோத் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 3வது முறையாக (2005, 2017, 2025) உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா வெளியேறியது.பைனலில் (நவ. 2, நவி மும்பை) இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.கருப்பு பட்டைஇளம் ஆஸ்திரேலிய வீரர் பென் ஆஸ்டின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்தியா, ஆஸ்திரேலியா வீராங்கனைகள் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.சிறந்த 'சேஸ்'341 ரன்னை விரட்டிய இந்திய பெண்கள் அணி, ஒருநாள் போட்டி அரங்கில் அதிக ரன்னை 'சேஸ்' செய்து புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன், சமீபத்தில் (அக். 12) விசாகப்பட்டனத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 331 ரன்னை 'சேஸ்' செய்திருந்தது.