லக்னோ: கோல்கட்டா பவுலர்கள் அசத்த, லக்னோ அணி 98 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.லக்னோ, வாஜ்பாய் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் லக்னோ, கோல்கட்டா அணிகள் மோதின. லக்னோ 'லெவன்' அணியில் மயங்க் யாதவ் நீக்கப்பட்டு யாஷ் தாகூர் இடம் பிடித்தார். கோல்கட்டா 'லெவன்' அணியில் மாற்றமில்லை. 'டாஸ்' வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
நரைன் அபாரம்
கோல்கட்டா அணிக்கு பில் சால்ட், சுனில் நரை ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மொசின் கான் வீசிய 4வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் நரைன். முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது நவீன் உல் ஹக் பந்தில் சால்ட் (32) அவுட்டானார். ரவி பிஷ்னோய் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய நரைன் 27 பந்தில் அரைசதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் வீசிய 11வது ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்ட நரைன் (81 ரன், 7 சிக்சர், 6 பவுண்டரி), பிஷ்னோய் பந்தில் அவுட்டானார். ரகுவன்ஷி 32 ரன் எடுத்தார். ரசல் (12), ரிங்கு சிங் (16), கேப்டன் ஸ்ரேயாஸ் (23) சோபிக்கவில்லை. கடைசி நேரத்தில் ராமன்தீப் சிங் கைகொடுத்தார்.கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 235 ரன் எடுத்தது. ராமன்தீப் (25), வெங்கடேஷ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் சரிவு
விக்கெட்கடின இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு அர்ஷின் (9) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ராகுல் (25), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (36) ஜோடி ஆறுதல் தந்தது. வருண் 'சுழலில்' தீபக் ஹூடா (5) சிக்கினார். ரசல் 'வேகத்தில்' நிக்கோலஸ் பூரன் (10) வெளியேறினார். நரைன் பந்தில் ஆயுஷ் படோனி (15) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய வருண் பந்தில் ஆஷ்டன் டர்னர் (16), யுத்விர் சிங் (7) அவுட்டாகினர். ஹர்ஷித் ராணா 'வேகத்தில்' குர்னால் பாண்ட்யா (5), பிஷ்னோய் (2) 'பெவிலியன்' திரும்பினர்.லக்னோ அணி 16.1 ஓவரில் 137 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது.