முஷ்பிகுர் சதம்: வங்கம் முன்னிலை
ராவல்பிண்டி: முஷ்பிகுர் ரஹிம் 191 ரன் விளாச, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 565 ரன் குவித்து முன்னிலை பெற்றது.பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448/6 ('டிக்ளேர்') ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 316/5 ரன் எடுத்திருந்தது. முஷ்பிகுர் (55), லிட்டன் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.நான்காம் நாள் ஆட்டத்தில் லிட்டன் தாஸ் 56 ரன்னில் அவுட்டானார். பொறுப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம், டெஸ்ட் அரங்கில் தனது 11வது சதம் விளாசினார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த மெஹிதி ஹசன் மிராஸ், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 196 ரன் சேர்த்த போது முஷ்பிகுர் (191) இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். மெஹிதி ஹசன் 77 ரன்னில் ஆட்டமிழந்தார்.வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 565 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் (1) ஏமாற்றினார். ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 23/1 ரன் எடுத்து 94 ரன் பின்தங்கி இருந்தது. ஷபீக் (12), கேப்டன் மசூது (9) அவுட்டாகாமல் இருந்தனர்.