ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: முதல் ஒருநாள் போட்டியில்
புலவாயோ: முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி, 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 80 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. புலவாயோவில் முதல் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.ரிச்சர்டு கரவா (48), சிக்கந்தர் ராஜா (39), மருமணி (29), சீன் வில்லியம்ஸ் (23) கைகொடுக்க ஜிம்பாப்வே அணி 40.2 ஓவரில் 205 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் சல்மான் ஆகா, பைசல் அக்ரம் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 21 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 60 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மழை நீடித்ததால் போட்டியை தொடர முடியவில்லை. 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 21 ஓவரில், 141 ரன் தேவைப்பட்டது. ஆனால் 81 ரன் குறைவாக இருந்ததால், ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஆட்டநாயகன் விருதை சிக்கந்தர் ராஜா (ஜிம்பாப்வே) வென்றார். ஜிம்பாப்வே அணி 1-0 என முன்னிலை பெற்றது.