உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சாய் சுதர்சன் அசத்தல் சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி

சாய் சுதர்சன் அசத்தல் சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி

ஆமதாபாத்: சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில், சாய் சுதர்சன் சதம் விளாச தமிழக அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தியது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் சையது முஷ்தாக் அலி டிராபி ('டி-20') 18வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று, ஆமதாபாத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதின.'டாஸ்' வென்ற சவுராஷ்டிரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் 'பேட்டிங்' தேர்வு செய்தார். விஷ்வராஜ் ஜடேஜா (70), சம்மர் கஜ்ஜார் (66) கைகொடுக்க, சவுராஷ்டிரா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. தமிழகம் சார்பில் சிலம்பரசன் 3, இசக்கிமுத்து 2 விக்கெட் கைப்பற்றினர்.சவாலான இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு துஷார் ரஹேஜா (1), ஷிவம் சிங் (2), கேப்டன் ஜெகதீசன் (5) ஏமாற்றினர். ரித்திக் ஈஸ்வரன் (29), சன்னி (30) ஓரளவு கைகொடுத்தனர். தனிநபராக அசத்திய துவக்க வீரர் சாய் சுதர்சன், 55 பந்தில் சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.தமிழக அணி 18.4 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 185 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் (101* ரன், 4x6, 10x4), சித்தார்த் (2) அவுட்டாகாமல் இருந்தனர். 'டி' பிரிவில் விளையாடிய 7 போட்டியில், 3 வெற்றி, 4 தோல்வி என, 12 புள்ளிகளுடன் தமிழக அணி 4வது இடம் பிடித்தது. ஜார்க்கண்ட் (28 புள்ளி), ராஜஸ்தான் (24) அணிகள் முதலிரண்டு இடம் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ