விசாகப்பட்டனம்: இந்தியா, இங்கிலாந்து மோதும் இரண்டாவது டெஸ்ட் நாளை விசாகப்பட்டனத்தில் துவங்குகிறது. இதில் சாதித்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அதிர்ச்சி தோல்வியடைந்த இந்தியா 0-1 என தொடரில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் நாளை விசாகப்பட்டனத்தில் துவங்குகின்றது. இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி வீரர்கள் அனைவரும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். சீனியர், ஜூனியர் என அனைத்து வீரர்களும் இதில் பங்கேற்றனர். எனினும் அணியில் இடம் பெற்ற இளம் வீரர்கள் மீது தான் பயிற்சியாளர்கள் அனைவரது கவனமும் இருந்தன. இங்கிலாந்து அணி வீரர்களின் 'ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை' எப்படி தடுப்பது என பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டன. புதியதாக சேர்க்கப்பட்ட சர்பராஸ் கான், கேப்டன் ரோகித் சர்மாவுடன் நீண்ட நேரம் ஆலோசித்துக் கொண்டிருந்தார். கடந்த 2020 முதல் முதல் தர போட்டிகளில் மிரட்டி வரும் சர்பராசின் சராசரி ரன் குவிப்பு 84.42 ஆக உள்ளது. இதனால் கோலி, ராகுல், ஜடேஜா என முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், நாளைய டெஸ்டில் இவர் கட்டாயம் சேர்க்கப்படுவார் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதனால், ரஜத் படிதர், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். முதல்தர போட்டிகளின் ரன் சராசரி 50.00 ஆக உள்ள படிதர், அஷ்வின் பந்தில் 'ரிவர்ஸ் ஸ்வீப்' அடித்து அசத்தினார். ஜடேஜாவுக்குப் பதில் குல்தீப் களமிறங்குவார் என நம்பப்படுகிறது. இதனால், மதியம் குல்தீப் யாதவ் பேட்டிங் பயிற்சியில் இறங்கினார். பயிற்சியாளர்கள் டிராவிட், விக்ரம் ரத்தோர் இணைந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உள்ளிட்டோருக்கு பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தனர்.
ஜாக் லீச் சந்தேகம்
இங்கிலாந்து அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச். ஐதராபாத் டெஸ்ட் முதல் நாளில் பீல்டிங் செய்த போது, இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இத்துடன் மொத்தம் 36 ஓவர் பந்து வீசியதால், வீக்கம் அதிகரித்துள்ளது. இவர் நேற்று பயிற்சியில் பங்கேற்கவில்லை. நாளை இவர் களமிறங்காத பட்சத்தில், சோயப் பஷிர், அறிமுக வாய்ப்பு பெறலாம்.
மீண்டும் 'சுழல்'
விசாகப்பட்டனம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் எனத் தெரிகிறது. முதல் நாளில் இருந்தே பந்தில் திருப்பம் ஏற்படலாம்.