ஹராரே: நான்காவது 'டி-20' போட்டியில் அசத்திய இளம் இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால், 93 ரன் விளாசினார். இந்திய அணி தொடரை 3-1 என கைப்பற்றியது.ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று சவால் முடிவில், இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. தேஷ்பாண்டே அறிமுகம்: நான்காவது போட்டி ஹராரேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில், 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் அவேஷ் கான் நீக்கப்பட்டு, 'வேகப்புயல்' துஷார் தேஷ்பாண்டே அறிமுக வாய்ப்பு பெற்றார்.ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி, மருமணி நல்ல துவக்கம் தந்தனர். இருவரும் அவ்வப்போது பவுண்டரி அடிக்க, 'ஸ்கோர்' சீராக உயர்ந்தது. இந்த நேரத்தில் பகுதி நேர பந்துவீச்சாளர்களான அபிஷேக் சர்மா, ஷிவம் துபே, ஜிம்பாப்வேக்கு 'செக்' வைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த நிலையில், அபிஷேக் 'சுழலில்' மருமணி (32) அவுட்டானார். இது சர்வதேச 'டி-20' போட்டியில் இவரது முதல் விக்கெட். துபே பந்தில் வெஸ்லி (25) வீழ்ந்தார். சிக்கந்தர் விளாசல்:பின் கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக ரன் சேர்த்தார். அபிஷேக், வாஷிங்டன் சுந்தர் பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். சிக்கந்தர் ராசாவை (46 ரன், 2 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேற்றிய துஷார் தேஷ்பாண்டே, சர்வதேச 'டி-20' போட்டியில் தனது முதல் விக்கெட்டை பெற்றார். கலீல் அஹமது 'வேகத்தில்' டெயிலெண்டர்கள் நடையைகட்டினர். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்தது. மிரட்டல் துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் கலக்கல் துவக்கம் தந்தனர். யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினார் ஜெய்ஸ்வால். மறுபக்கம் சுப்மன் அடக்கி வாசித்தார். சத்தாரா ஓவரில் ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி அடிக்க, 16 ரன் கிடைத்தன. 3.5 ஓவரில் இந்தியா 52/0 ரன்னை எட்டியது. சிக்கந்தர் ராசா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜெய்ஸ்வால், 29 பந்தில் அரைசதம் எட்டினார். சுப்மன் 35 பந்தில் அரைசதம் அடித்தார். முசர்பானி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜெய்ஸ்வால், மின்னல் வேக வெற்றி தேடித் தந்தார். இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சதத்தை நெருங்கிய ஜெய்ஸ்வால் (93 ரன், 13 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன் கில்(58 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்டநாயகன் விருதை ஜெய்ஸ்வால் வென்றார்.
2000 ரன், 50 விக்கெட்
'ஆல்-ரவுண்டராக' அசத்திய சிக்கந்தர் ராசா, சர்வதேச 'டி-20' போட்டியில் 2000 ரன் எடுத்த முதல் ஜிம்பாப்வே வீரரானார். 2000 ரன் + 50 விக்கெட் வீழ்த்திய 5வது வீரரானார். இதுவரை 90 போட்டியில் 2029 ரன், 65 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இப்பட்டியலில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (2551 ரன், 149 விக்.,) முதலிடத்தில் உள்ளார்.
ஐந்தாவது இடம்
நேற்று ஜெய்ஸ்வால்-சுப்மன் சேர்ந்து 156 ரன் சேர்த்தனர். சர்வதேச 'டி-20' போட்டியில் அதிக ரன் சேர்த்த இந்திய துவக்க ஜோடி பட்டியலில் 5வது இடம் பிடித்தனர். முதலிடத்தில் ரோகித்-ராகுல் (165 ரன், எதிர் இலங்கை, இந்துார், 2017) உள்ளனர்.
இரண்டாவது முறை
சர்வதேச 'டி-20' போட்டியில் இந்திய அணி, இரண்டாவது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு முன் 2016ல் இதே ஜிம்பாப்வேக்கு எதிராக 10 விக்கெட்டில் (இலக்கு 100, 2016, ஹராரே) வென்றிருந்தது.* 150 ரன்னுக்கு அதிகமான இலக்கை நேற்று சேஸ் செய்த இந்தியா, அதிக பந்து (28) மீதமிருக்கையில் வென்றது. முன்னதாக வங்கதேசத்திற்கு எதிராக 26 பந்து மீதமிருக்கையில் (இலக்கு 154, ராஜ்கோட், 2019) வென்றிருந்தது.* 150 ரன்னுக்கு அதிகமான இலக்கை விக்கெட் இழக்காமல் வென்ற அணிகள் பட்டியலில் இந்தியா 4வது இடம் (153 ரன்) பெற்றது. முதலிடத்தில் பாகிஸ்தான் (200 ரன், எதிர் இங்கிலாந்து, கராச்சி, 2022) உள்ளது.