பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்: காம்பிருக்கு கவாஸ்கர் ஆதரவு
புதுடில்லி: ''பயிற்சியாளர் காம்பிர் மீது பழி சுமத்துவது சரியல்ல. களத்தில் இறங்கி சிறப்பாக விளையாட வேண்டியது வீரர்கள் தான்,'' என கவாஸ்கர் தெரிவித்தார்.டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொதப்புகிறது. பயிற்சியாளராக காம்பிர் பொறுப்பேற்ற 16 மாதங்களில், சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது. ஆஸ்திரேலியாவில் 1-3 என தோற்றது. சமீபத்திய தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கவுகாத்தி டெஸ்டில் 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, தொடரை 0-2 என இழந்தது. இதற்கு காம்பிரின் தவறான வியூகம், 'பேட்டிங் ஆர்டரை' அடிக்கடி மாற்றியது, 'ஆல்-ரவுண்டர்களுக்கு' முக்கியத்துவம் அளித்தது போன்றவை காரணமாக அமைந்தன. இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இரு கோப்பை வென்றார்: இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''பயிற்சியாளர் காம்பிர் சிறந்த அணியை தயார் செய்யலாம். களத்தில் இறங்கி சிறப்பாக விளையாட வேண்டிய பொறுப்பு வீரர்களுக்கு தான் உண்டு. காம்பிர் பயிற்சியில் தான் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை வென்றது. அப்போது இவரது ஒப்பந்த காலத்தை நீடிக்க வேண்டும் அல்லது ஒருநாள் போட்டி, 'டி-20' போட்டிக்கு வாழ்நாள் பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென யாரும் வலியுறுத்தவில்லை. கோப்பை வெல்லும் போது அங்கீகாரம் அளிக்க தவறுபவர்கள், டெஸ்டில் தோற்றவுடன் பயிற்சியாளர் மீது பழி சுமத்துவது ஏன் என புரியவில்லை. மூன்றுவித கிரிக்கெட்டுக்கும் இங்கிலாந்து பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் உள்ளார். இது போல பல அணிகளுக்கும் ஒருவர் தான் பயிற்சியாளராக உள்ளார். இந்தியாவில் மட்டும் தோல்வியை சந்தித்தால், உடனே டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாளரை நீக்க வேண்டுமென குரல் எழுப்புகின்றனர்,''என்றார்.பயிற்சியாளர் பிரச்னையா...இந்திய அணி முன்னாள் 'ஸ்பின்னர்' அஷ்வின் கூறுகையில்,''நான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. காம்பிர் எனது உறவினரும் அல்ல. என்னாலும் 10 தவறுகளை சுட்டிக்காட்ட முடியும். தவறுகள் நடப்பது சகஜம். தோல்விக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டுமென விரும்புகிறோம். பயிற்சியாளர் பேட் எடுத்துக் கொண்டு விளையாட முடியாது என்பது தான் உண்மை. அவரது இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள். களத்தில் திறமையை வெளிப்படுத்தி, சிறப்பாக விளையாட வேண்டியது வீரர்கள் தான். பயிற்சியாளர் தான் பிரச்னை என சொல்கின்றனர். வீரர்கள் தரப்பில் பழியை ஏற்பது இல்லை. யார் மீதாவது பழி சுமத்த விரும்புகிறோம். தனிநபர் தாக்குதல் எனக்கு பிடிக்கவில்லை,''என்றார்.மன்னிப்பு: ரிஷாப் பன்ட்இந்திய கேப்டன் ரிஷாப் பன்ட் கூறுகையில், ''கடந்த இரு வாரமாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. உயர் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் முகங்களில் புன்னகையை பார்க்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன். விளையாட்டு நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கும். இந்திய அணியின் திறமை பற்றி தெரியும். கடினமாக பயிற்சி மேற்கொண்டு வலிமையாக மீண்டு வருவோம்,'' என்றார்.