மேலும் செய்திகள்
தென் ஆப்ரிக்கா அபாரம்: இலங்கை அணி தடுமாற்றம்
08-Dec-2024
கெபேஹா: இரண்டாவது டெஸ்டில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி 109 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. தொடரை 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.தென் ஆப்ரிக்கா சென்ற இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் கெபேஹாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 358, இலங்கை 328 ரன் எடுத்தன. தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 317 ரன் எடுத்தது. பின், 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 4ம் நாள் முடிவில் 205/5 ரன் எடுத்திருந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் வெற்றிக்கு இன்னும் 143 ரன் தேவைப்பட்டன. ஆறாவது விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்த போது கேஷவ் மஹாராஜ் 'சுழலில்' குசால் மெண்டிஸ் (46) சிக்கினார். கேப்டன் தனஞ்செயா டி சில்வா (50) ஆறுதல் தந்தார். மஹாராஜ் பந்தில் பிரபாத் ஜெயசூர்யா (9), விஷ்வா பெர்ணான்டோ (5) அவுட்டாகினர். இலங்கை அணி 2வது இன்னிங்சில் 238 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் கேஷவ் மஹாராஜ் 5 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் டேன் பேட்டர்சன் வென்றார். தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்க கேப்டன் டெம்பா பவுமா (327 ரன்) கைப்பற்றினார்.
இலங்கையை 'ஒயிட்வாஷ்' செய்த தென் ஆப்ரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-2025) புள்ளிப்பட்டியலில் 63.33 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி (60.71%) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மூன்றாவது இடத்தில் இந்திய அணி (57.29%) உள்ளது.
08-Dec-2024