உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆப்கானிஸ்தான் அணி அசத்தல் *உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது

ஆப்கானிஸ்தான் அணி அசத்தல் *உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது

கிங்ஸ்டவுன்: ஆப்கானிஸ்தானின் வெற்றி அலை தொடர்கிறது. லீக் சுற்றில் நியூசிலாந்தை வென்றது. 'சூப்பர்-8'ல் ஆஸ்திரேலியாவுக்கு 'ஷாக்' கொடுத்தது. நேற்று வங்கத்தை சாய்த்து, உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி வரலாறு படைத்தது. வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று கிங்ஸ்டவுனில் நடந்த 'சூப்பர்-8' சுற்று போட்டியில் (பிரிவு-1) வங்கதேசம் (ரேங்கிங்கில் 9வது இடம்), ஆப்கானிஸ்தான் (10வது இடம்) மோதின. துவக்கம் கவனம்ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜத்ரன் நிதான துவக்கம் தந்தனர். கணிக்க முடியாத ஆடுகளத்தில் கவனமாக ஆடினர். 6 ஓவரில் 27/0 ரன் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த நிலையில், ரிஷாத் பந்தில் ஜத்ரன் (18) வெளியேறினார். ஓமர்சாய் (10) நிலைக்கவில்லை. குர்பாஸ், 43 ரன்னுக்கு அவுட்டானார். குல்பதின் (4), நபி (1) விரைவில் பெவிலியன் திரும்ப, ஸ்கோர் உயரவில்லை. கடைசி கட்டத்தில் கேப்டன் ரஷித் கான் நம்பிக்கை தந்தார். டஸ்கின் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். தொடர்ந்து டன்ஜிம் வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். கடைசி பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய ரஷித், கச்சிதமாக 'பினிஷிங்' செய்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்தது. ரஷித் (19), ஜனத் (7) அவுட்டாகாமால் இருந்தனர்.திணறல் துவக்கம்வங்கதேச அணி 12.1 ஓவரில் இலக்கை எட்டினால், அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. மழை நின்றதும், ஆட்டம் துவங்கியது. நவீன் உல்-ஹக் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அதிரடி துவக்கம் தந்தார் லிட்டன் தாஸ். இதற்கு பின் 'வேகத்தில்' நவீன்-உல்-ஹக்கும் 'சுழலில்' ரஷித் கானும் போட்டுத்தாக்க, வங்கம் பங்கமானது. 3வது ஓவரை வீசிய நவீன்-உல்-ஹக் வரிசையாக கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷான்டோ (5), அனுபவ சாகிப் அல் ஹசனை (0) அவுட்டாக்கி திருப்பம் ஏற்படுத்தினார். வங்கதேச அணி 3 ஓவரில் 24 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தவித்தது. 3.3வது ஓவரில் மழை சிறிது நேரம் தொல்லை கொடுத்தது. ரஷித் கான் வலையில் சவுமியா சர்கார் (10), தவ்ஹித் (14), 'சீனியர்' மஹமுதுல்லா (6) சிக்கினர். இலக்கு மாற்றம்11.4வது ஓவரில் மீண்டும் மழை பெய்ய, ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வங்கதேச அணி 19 ஓவரில் 114 ரன் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. தனிநபராக போராடிய லிட்டன் தாஸ் அரைசதம் கடந்த போதும், அணியை காப்பாற்ற முடியவில்லை. நவீன்-உல்-ஹக் பந்தில் முஸ்தபிஜுர் (0) கடைசியில் அவுட்டாக, ஆப்கானிஸ்தான் வீரர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். வங்கதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி 8 ரன்னில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது. லிட்டன் (54) அவுட்டாகாமல் இருந்தார்.ஆப்கானிஸ்தான் சார்பில் நவீன்-உல்-ஹக், ரஷித் கான் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். முதல் முறைஉலக கோப்பை அரங்கில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக நேற்று வங்கதேசத்தை வீழ்த்தியது. இதற்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய நான்கு போட்டிகளில் (2014ல் 'டி-20', 3 முறை ஒருநாள் உலக கோப்பையில் 2015, 19, 23) வங்கதேசமே வென்றது. 152'டி-20' அரங்கில் 150 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது பவுலரானார் ரஷித் கான். 92 போட்டியில் 152 விக்கெட் கைப்பற்றியுள்ளார். முதலிடத்தில் நியூசிலாந்தின் டிம் சவுத்தீ (164 விக்., 126 போட்டி) உள்ளார். * 'டி-20' அரங்கில் அதிக முறை (9) நான்கு விக்கெட் வீழ்த்திய பவுலரானார் ரஷித் கான். அடுத்த இடத்தில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (8 முறை) உள்ளார். * 'டி-20' உலக கோப்பை அரங்கில் 3வது முறையாக நான்கு விக்கெட் வீழ்த்தினார் ரஷித் கான்.442ஒரு 'டி-20' உலக கோப்பை தொடரில் அதிக ரன் (442) சேர்த்த ஜோடி என்ற பெருமையை ஆப்கானிஸ்தானின் குர்பாஸ், ஜத்ரன் பெற்றனர். இவர்கள், 2021ல் பாகிஸ்தானின் பாபர், ரிஸ்வான் (411 ரன் ) சாதனையை தகர்த்தனர். ஆஸ்கர் விருது கொடுங்கப்பா...போட்டியின் 12வது ஓவரில் மழை குறுக்கிட, வங்கதேசம் 81/7 ரன் எடுத்து தத்தளித்தது. அப்போது ஆப்கானிஸ்தான் 'டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி 2 ரன் முன்னிலையில் இருந்தது. இதை அறிந்த ஆப்கன் பயிற்சியாளர் ஜோனாதான் டிராட், போட்டியை தாமதம் செய்யும்படி சைகை செய்தார். உடனே 'ஸ்லிப்' பகுதியில் 'பீல்டிங்' செய்து கொண்டிருந்த குல்பதின், தொடை பகுதியில் பிடிப்பு ஏற்பட்டதாக சுருண்டு விழுந்தார். சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டது. இவர் களத்தை விட்டு வெளியேற, மாற்று வீரராக நஜிபுல்லா வந்தார். சிறிது நேரத்தில் திரும்பிய குல்பதின், 15வது ஓவரை பந்துவீசி டன்ஜிம் ஹசன் விக்கெட்டை வீழ்த்தினார். இவ்வளவு சீக்கிரம் எப்படி மீள முடியும் என்ற சர்ச்சை எழுந்தது. குல்பதின் காயம் ஏற்பட்டது போல நடித்ததாக 'நெட்டிசன்கள்' கலாய்த்து வருகின்றனர். போட்டி வர்ணனையாளர் ஜிம்பாப்பேவேயின் பொம்மி மபாங்கவா கூறுகையில்,''குல்பதினுக்கு ஆஸ்கர் அல்லது எம்மி விருது வழங்கலாமா'' என்றார்.இந்திய வீரர் அஷ்வின் வெளியிட்ட செய்தியில்,'குல்பதினுக்கு 'ரெட் கார்டு' காண்பிக்கலாம்' என குறிப்பிட்டார்இதற்கு குல்பதின்,''நாம் மகிழ்ச்சியாக அல்லது கவலையாக இருக்கும் போது சில நேரங்களில் தொடையில் பிடிப்பு ஏற்படும்,' என ஜாலியாக பதில் அளித்துள்ளார்கேப்டன் ரஷித் கான் கூறுகையில்,''குல்பதினுக்கு லேசான பிடிப்பு ஏற்பட்டது. இது பற்றி சமூகவலைதளங்களில் நிலவும் கருத்து பற்றி தெரியவில்லை. இந்த சம்பவம் ஆட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை,''என்றார்.நம்பிய லாராபோர் பூமியான ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் பயிற்சிக்கு வசதி இல்லை. துபாய், இந்தியாவில் தான் பயிற்சி மேற்கொண்டனர். சோதனைகளை கடந்து தற்போது சாதித்துள்ளனர். கேப்டன் ரஷித் கான் கூறுகையில்,''உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு நாங்கள் தகுதி பெறுவோம் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாரா மட்டுமே கணித்தார். இதை உண்மை என நிரூபித்துள்ளோம். அரையிறுதிக்கு முன்னேறுவது கனவாக இருந்தது. நியூசிலாந்தை வென்ற போது நம்பிக்கை துளிர்விட்டது. பெரிய சாதனை படைத்துள்ளோம். இது ஆப்கானிஸ்தானின் இளம் தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கும். எங்கள் மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பர். எனது உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இதே உற்சாகத்துடன் அரையிறுதியில் விளையாடுவோம்,''என்றார்.பாராட்டு மழைஆப்கானிஸ்தானின் தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முடாக்கி, 'வீடியோ' அழைப்பு மூலம் கேப்டன் ரஷித் கானை தொடர்பு கொண்டு பாராட்டினார். இந்தியாவின் சச்சின், சேவக் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். சச்சின் கூறுகையில்,''ஆப்கானிஸ்தானின் அரையிறுதி பயணம் நம்ப முடியாத வகையில் வியப்பாக உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவை வென்றனர். நேற்றைய வெற்றி கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுக்கு உதாரணம். முன்னேற்றத்தை கண்டு பெருமைப்படுகிறேன். சிறப்பான ஆட்டத்தை தொடருங்கள்,''என்றார். கொண்டாட்டம்ஆப்கானிஸ்தான் மக்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்கின்றனர். காபூல், காந்தகார் நகரங்களின் தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். டில்லி நடைபாதைகளில் அகதிகளாக வாழும் ஆப்கானிஸ்தான் மக்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
ஜூன் 26, 2024 17:11

இது வங்க தேசம் விட்டு கொடுத்த வெற்றி. முதல் பத்து ஓவரில் 90 ரன்கள் எடுத்த வங்கதேச அணி குறிப்பட்ட 12 ஓவருக்குள் வெற்றியை பெற முடியாததால் ஏழு ஓவருக்குள் மீதமுள்ள 16 ரன்களை எடுக்காமல் வேண்டும் என்று தோல்வியடைந்து விட்டு கொடுத்து விட்டது...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை