| ADDED : ஜூன் 25, 2024 10:55 PM
கிங்ஸ்டவுன்: ஆப்கானிஸ்தான் நேற்று வென்றதை தொடர்ந்து, 'டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணி. உலக கிரிக்கெட் அரங்கில் வலிமையான அணி ஆஸ்திரேலியா. ஒருநாள் உலக கோப்பை தொடரில் 6 முறை கோப்பை வென்றது. தவிர இரு முறை பைனலில் தோற்றது. இதேபோல் 'டி-20' உலக தொடரில் 2021ல் சாம்பியன் ஆனது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2021-23 தொடரில் இந்தியாவை சாய்த்து கோப்பை வென்றுள்ளது. தொடர்ந்து வெற்றிஐ.சி.சி., நடத்தும் தொடர்களில் பெரும்பாலும் லீக் சுற்று முதல், கடைசி வரை தொடர்ந்து வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றும். கடந்த 2003ல் 13, 2007ல் 12 என 2011ல் 4 என ஸ்டீவ் வாக், பாண்டிங் தலைமையில் தொடர்ந்து 29 போட்டியில் வெற்றி பெற்றது. கடந்த 2023ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் முதல் இரு போட்டியில் (இந்தியா, தென் ஆப்ரிக்கா) தோற்றது. அடுத்து தொடர்ந்து 9 போட்டியில் வென்று, சாம்பியன் ஆனது. இம்முறை வெஸ்ட் இண்டீசிலும் முத்திரை பதிக்கும் என நம்பப்பட்டது.திடீர் சறுக்கல்மிட்செல் மார்ஷ் தலைமையில் டிராவிஸ் ஹெட், வார்னர், மேக்ஸ்வெல் என முன்னணி பேட்டர்களுடன் களமிறங்கியது. ஆனால் 'மிடில் ஆர்டர்' சொதப்பியதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் தோற்று வெளியேற நேரிட்டது. பவுலிங்கில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட், ஜாம்பா என அனுபவ பவுலர்கள் இருந்த போதும், சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்த திணறினர். சீனியர் வீரர்களுக்கு விடை கொடுத்து, இளம் நட்சத்திரங்களுடன் ஆஸ்திரேலியா மீண்டு வர முயற்சிக்கும்.