புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டில்லியில் பிரதமர் மோடி உடன் விருந்து, மும்பையில் 'ரோடு-ஷோ', ரசிகர்களின் வாழ்த்து, பாராட்டு விழா என நாள் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்தனர்.பார்படாசில் நடந்த 'டி-20' உலக கோப்பை பைனலில் (ஜூன் 29) இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'டி-20' சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியது. பார்பர்டாசை தாக்கிய 'பெரில்' புயல் காரணமாக, நமது வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்ப முடியவில்லை. மூன்று நாள் தாமதத்திற்கு பின், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் கிளம்பினர். எங்கும் நிற்காமல் 16 மணி நேர பயணத்திற்கு பிறகு நேற்று காலை 6 மணிக்கு டில்லி விமான நிலையம் வந்தனர். உலக கோப்பையை கையில் ஏந்தியவாறு கேப்டன் ரோகித் சர்மா முதலில் இறங்கினார். லேசாக மழை பெய்த போதும், ரசிகர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். இரண்டு பஸ் மூலம் மவுரியா நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். நுழைவுவாயிலில் மேளதாளம் முழங்க, பாரம்பரிய 'பாங்க்ரா' நடன கலைஞர்கள் வரவேற்றனர். ரோகித், ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பன்ட் சேர்ந்து ஆட, ஆரம்பமே களை கட்டியது. உலக கோப்பை வடிவில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 'கேக்' வெட்டி ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் மகிழ, ஓட்டல் பணியாளர்களும் உற்சாகம் அடைந்தனர்.பிரதமர் வீட்டில் விருந்துபின் பிரதமர் மோடியின் வீட்டுக்கு கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்டோர் காலை 11 மணிக்கு சென்றனர். இவர்களுடன் உணவு சாப்பிட்ட மோடி, உலக கோப்பை அனுபவங்களை கேட்டறிந்தார். பைனலில் ஒவ்வொரு 'ஷாட்' குறித்தும் அறிந்து வைத்திருந்தார். சூர்யகுமாரின் கலக்கல் 'கேட்ச்' உட்பட அனைத்து அம்சங்களையும் ஆர்வமாக கேட்டார். பின் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியாகவும் 'குரூப்' போட்டோவும் எடுத்துக் கொண்டார்.பி.சி.சி.ஐ., தலைவர் ரோஜர் பின்னி, செயலர் ஜெய் ஷா சேர்ந்து 'நமோ, 1' என பொறிக்கப்பட்ட இந்திய அணியின் சிறப்பு 'ஜெர்சி'யை பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக வழங்கினர். இரண்டு மணி நேர சந்திப்பு இனிதே முடிந்தது.பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில்,'உலக சாம்பியன்களுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. உலக கோப்பை அனுபவங்களை விவாதித்தது மறக்க முடியாதது,''என தெரிவித்துள்ளார்.கோலி வெளியிட்ட செய்தியில்,''பிரதமர் மோடியை சந்தித்தது பெரிய கவுரவம். வீட்டிற்கு எங்களை அழைத்து பாராட்டியதற்கு நன்றி,'என தெரிவித்துள்ளார்.புதிய ஜெர்சிநேற்று இந்திய அணியினர் புதிய ஜெர்சி அணிந்திருந்தனர். இதில் 'இந்தியா சாம்பியன்ஸ்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. ஜெர்சியின் வலது புறம் 'டி-20' உலக கோப்பை 2024க்கான லோகோவும், இடது புறம் பி.சி.சி.ஐ., லோகோவும் இருந்தது. இந்திய அணி 2007, 2024ல் 'டி-20' உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில், பி.சி.சி.ஐ., லோகோவின் மேற்பகுதியில் இரண்டு 'ஸ்டார்' இடம் பெற்றிருந்தது.