வெஸ்ட் இண்டீஸ் அபாரம்: 164 ரன்னுக்கு சுருண்டது வங்கம்
கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 69/2 ரன் எடுத்திருந்தது.2ம் நாள் ஆட்டத்தில் ஷாத்மன் இஸ்லாம் (64), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (36) கைகொடுக்க வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 164 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2ம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 70 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (33), கீசி கார்டி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
சபாஷ் சீல்ஸ்
'வேகத்தில்' மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ், 15.5 ஓவர் பந்துவீசி, வெறும் 5 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட் சாய்த்தார். இதில் 10 'மெய்டன் ஓவர்' அடங்கும். இவரது 'எகானமி' 0.31 ஆக உள்ளது. டெஸ்ட் அரங்கில் சிறந்த 'எகானமி' பெற்ற 2வது வெஸ்ட் இண்டீஸ் பவுலரானார். ஏற்கனவே 1956ல் வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ், 14 ஓவர் பந்துவீசி (11 'மெய்டன்'), 3 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட் வீழ்த்தினார். இவரது 'எகானமி' 0.21 ஆக உள்ளது. சிறந்த 'எகானமி' பெற்ற சர்வதேச பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் பாபு நத்கர்னி (0.15 'எகானமி', எதிர்: இங்கிலாந்து, 32 ஓவர், 5 ரன், 27 'மெய்டன்', 0 விக்., இடம்: சென்னை) முதலிடத்தில் உள்ளார்.