இளம் இந்தியா ரன் குவிப்பு: வைபவ், திரிவேதி சதம்
பிரிஸ்பேன்: சூர்யவன்ஷி, திரிவேதி சதம் விளாச, இளம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 428 ரன் குவித்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 243 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே (21), விஹான் மல்ஹோத்ரா (6) சோபிக்கவில்லை. பின் இணைந்த வைபவ் சூர்யவன்ஷி (113), வேதாந்த் திரிவேதி (140) சதம் கடந்து கைகொடுத்தனர். அபிக்யான் (26), ராகுல் குமார் (23) நிலைக்கவில்லை. கிலான் படேல் (49) ஓரளவு கைகொடுத்தார்.இந்திய அணி முதல் இன்னிங்சில் 428 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தீபேஷ் (11) அவுட்டாகாமல் இருந்தார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலெக்ஸ் லீ யங் (0) ஏமாற்றினார். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 8 ரன் எடுத்து, 177 ரன் பின்தங்கி இருந்தது. அலெக்ஸ் டர்னர் (6), ஸ்டீவன் ஹோகன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் தீபேஷ் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.