பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் 'ரவுண்டு-16' போட்டிக்கு இந்தியாவின் பஜன் கவுர் முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை அன்கிதா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.பிரான்சில் நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை, பெண்களுக்கான தனிநபர் முதல் சுற்றில் ('ரவுண்டு-64') இந்தியாவின் பஜன் கவுர், இந்தோனேஷியாவின் சைபா நுராபிபா கமால் மோதினர். இதில் பஜன் கவுர் 7-3 (27-27, 27-29, 29-27, 27-25, 28-25) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் ('ரவுண்டு-32') பஜன் கவுர், போலந்தின் வயோலெட்டா மைசோர் மோதினர். இதில் மீண்டும் அசத்திய பஜன் கவுர் 6-0 (28-23, 29-26, 28-22) என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் ('ரவுண்டு-16') நுழைந்தார்.பெண்கள் தனிநபர் மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் அன்கிதா பகத், போலந்தின் வயோலெட்டா மைசோர் மோதினர். இதில் ஏமாற்றிய அன்கிதா 4-6 (26-27, 29-26, 28-27, 27-29, 27-28) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.இன்று நடக்கும் பெண்களுக்கான தனிநபர் முதல் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி பங்கேற்கிறார். இதில் எஸ்தோனியாவின் ரீனா பர்னாட்டை எதிர்கொள்கிறார். ஆண்களுக்கான தனிநபர் முதல் சுற்றில் இந்தியாவின் தருண்தீப் ராய், பிரிட்டனின் டாம் ஹால் மோதுகின்றனர்.அமித் பங்கல் அதிர்ச்சிஆண்களுக்கான குத்துச்சண்டை 51 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல் 28, ஜாம்பியாவின் பாட்ரிக் சின்யெம்பா 23, மோதினர். இதில் ஜாம்பிய வீரரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறிய அமித் பங்கல் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.* பெண்களுக்கான 57 கிலோ பிரிவு 'ரவுண்டு-32' போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா, பிலிப்பைன்சின் நெஸ்தி பெடிசியோ மோதினர். இதில் ஏமாற்றிய ஜாஸ்மின் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.நீச்சல்: கேட்டி லெடிக்கி முதலிடம்பெண்களுக்கான நீச்சல் 1500 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு தகுதிச் சுற்றில் இலக்கை 15 நிமிடம், 47.43 வினாடியில் கடந்த அமெரிக்காவின் கேட்டி லெடிக்கி முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். ஏற்கனவே 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் வெண்கலம் வென்ற லெடிக்கி, இன்று நடக்கும் 1500 மீ., பைனலில் அசத்தும் பட்சத்தில் இம்முறை முதல் தங்கம் வெல்லலாம். தவிர இவர், ஒலிம்பிக் அரங்கில் தனது 8வது தங்கத்தை கைப்பற்றலாம்.