| ADDED : மே 04, 2024 10:02 PM
அஸ்தானா: ஆசிய குத்துச்சண்டை (22 வயது) பைனலுக்கு இந்தியாவின் ஆகாஷ், விஷ்வநாத், நிகில் உள்ளிட்டோர் முன்னேறினர்.கஜகஸ்தானில் ஆசிய யூத், 22 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. நேற்று, 22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான அரையிறுதி போட்டிகள் நடந்தன. இதில் 60 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆகாஷ் கோர்கா, உஸ்பெகிஸ்தானின் இலியாசோவ் சயத் மோதினர். அபாரமாக ஆடிய 'சீனியர் தேசிய சாம்பியன்' ஆகாஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.'நடப்பு யூத் உலக சாம்பியன்' விஷ்வநாத் சுரேஷ், 48 கிலோ பிரிவு அரையிறுதியில் 5-2 என பிலிப்பைன்சின் பாரிகுவாட்ரோ பிரையனை தோற்கடித்தார். மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிகில் (57 கிலோ), பிரீத் மாலிக் (67) 5-2 என வெற்றி பெற்றனர். மற்ற இந்திய வீரர்களான ஜதுமணி சிங் (51 கிலோ), அஜய் குமார் (63.5), அன்குஷ் (71), துருவ் சிங் (80), ஜக்னோ (86), யுவராஜ் (92) ஆகியோர் அரையிறுதியில் தோல்வியடைந்தனர்.பெண்களுக்கான யூத் பிரிவு அரையிறுதியில் 'நடப்பு ஜூனியர் உலக சாம்பியன்' நிஷா (52 கிலோ), 'ஆசிய யூத் சாம்பியன்' நிகிதா சந்த் (60) உட்பட 7 இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்றனர்.இத்தொடரில் இதுவரை இந்தியாவுக்கு 43 பதக்கம் உறுதியாகின. யூத் பிரிவில் 14 இந்திய நட்சத்திரங்கள் (7 வீரர், 7 வீராங்கனைகள்) பைனலுக்குள் நுழைந்தனர்.