| ADDED : மே 21, 2024 11:18 PM
ஆன்ட்வெர்ப்: பெல்ஜியத்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இளம் இந்திய அணி 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 'திரில்' வெற்றி பெற்றது. ஐரோப்பா சென்றுள்ள இந்திய இளம் ஹாக்கி அணிகள், பெல்ஜியம், ஜெர்மனி அணிக்கு எதிராக தலா 2 போட்டியில் பங்கேற்கின்றன. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் நடந்த முதல் போட்டியில் இந்திய இளம் ஆண்கள் அணி, பெல்ஜியத்தை எதிர்கொண்டது. போட்டியின் 3, 27 வது நிமிடத்தில் இந்தியாவின் ஷர்தானந்த் திவாரி, தலா ஒரு கோல் அடித்தார். கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட பெல்ஜியம் அணி தரப்பில் 2 கோல் அடிக்கப்பட, போட்டி 2-2 என சமனில் முடிந்தது.வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இந்தியா சார்பில் குர்ஜோத் சிங், சவுரப் ஆனந்த், தில்ராஜ் சிங், மன்மீத் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். பெல்ஜியம் வீரர்கள் 2 கோல் அடித்தனர். மற்ற வாய்ப்புகளை இந்திய அணி கோல் கீப்பர் பிரின்ஸ் தீப் சிங் சிறப்பாக தடுத்தார். முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.