UPDATED : ஜூலை 28, 2024 04:52 PM | ADDED : ஜூலை 28, 2024 04:08 PM
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கலம் வென்றார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் மனு பாகர் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய மனு பாகர், 221.7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. தவிர இவர், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார். 12 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்திய வீரர் ககன் நரங் (10 மீ., 'ஏர் ரைபிள்') பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். இது, ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 5வது பதக்கம். இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் கிடைத்துள்ளன.முதலிரண்டு இடங்களை தென் கொரியாவின் ஓ யே ஜின் (243.2 புள்ளி), கிம் யேஜி (241.3) கைப்பற்றினர்.