பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கியில் இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணி (ஆண்கள்), 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக 41 ஆண்டுக்குப் பின் டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) வெண்கலம் கைப்பற்றியது.கடந்த ஆண்டு (2023) நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியா, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, 'குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் 'பி' பிரிவில் நியூசிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து, நடப்பு சாம்பியன் பெல்ஜியம், அபாயகரமான ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.'ஏ' பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ் அணிகள் உள்ளன.இன்று தனது முதல் சவாலில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்க உள்ளது. அடுத்து அர்ஜென்டினா (ஜூலை 29), அயர்லாந்து (ஜூலை 30), பெல்ஜியம் (ஆக. 1), ஆஸ்திரேலியாவுடன் (ஆக. 2) மோதும்.பின்தங்கிய தரவரிசைசமீப காலமாக 3வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது தரவரிசையில் 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அன்றைய நாளில் சிறப்பாக செயல்படும் அணிக்கு வெற்றி கிடைக்கும் என்பதால், பயிற்சியாளர் கிரேக் புல்டான், நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.கடந்த டோக்கியோவில் பதக்கம் வென்ற அணியில் இடம் பெற்ற 11 வீரர்கள் இம்முறை அணியில் (மொத்தம் 16) இடம் பிடித்துள்ளனர். இந்திய ஹாக்கியின் 'சுவர்' என்றழைக்கப்படும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், தனது கடைசி தொடரில் பங்கேற்கிறார்.இவருடன் சேர்ந்து மன்பிரீத் சிங்கும் தங்களது நான்காவது ஒலிம்பிக்கில் களமிறங்குகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணியின் முதுகெலும்பாக திகழும் இந்த 'இருவர்', மீண்டும் இந்தியாவுக்கு கைகொடுக்கலாம்.தவிர, துணைக்கேப்டன் ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் மத்திய களத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். லலித் உபாத்யாய், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங் உள்ளிட்டோர் கோல் அடிக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.பைனல் பாதை எப்படிஹாக்கியில் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் வெல்லும் அணிகள் அரையிறுதிக்கு (ஆக. 6) தகுதி பெறும். தோற்கும் அணிகள் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் (ஆக. 8) மோதும். பைனல் ஆக. 8ல் நடக்கவுள்ளது.