அ ரியலுாரில் சிக்கிய நிர்வாண திருடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலம்
அரியலுார்:அரியலுார் அருகே வீடுகளில் திருடுவதுடன், தனியாக இருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த நிர்வாண திருடனை போலீசார் கைது செய்தனர்.அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இறவாங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் சங்கீதா, 42. இவரது கணவர் இறந்து விட்டார். இரு மகள்கள் சென்னையில் படிக்கின்றனர். தனியாக வசிக்கும் சங்கீதாவுக்கு துணையாக எதிர் வீட்டில் வசிக்கும் சாந்தா, 70, என்ற மூதாட்டி இரவு நேரங்களில் துணைக்கு படுத்து துாங்குவார்.மார்ச்சில் ஒருநாள் இரவில், வீட்டின் கேட் திறக்கும் சத்தம் கேட்டு சாந்தா சென்று பார்த்தார். அப்போது, மர்ம நபர் ஓடியுள்ளார். அதிர்ச்சியடைந்த சங்கீதா, சாந்தா, வீட்டிற்குள் பார்த்தபோது, பின்கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர், பீரோவில் இருந்த 28 கிராம் தங்க நகை, 5,000 ரூபாய் ரொக்கம் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதேபோல், வேம்புகுடியைச் சேர்ந்த துரை மனைவி அமுதா, தன் மகளுடன் துாங்கிக் கொண்டிருந்தபோது, பீரோவில் இருந்த அரை சவரன் தோடு திருடப்பட்டது. சங்கீதா, அமுதா புகார்களில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, வீடியோவில் நிர்வாணமாக ஒரு நபர் அந்த வீடுகளுக்குள் நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. வீடியோவில் பதிவான நபரின் அடையாளத்தைக் கொண்டு போலீசார் அந்த நிர்வாண நபரை தேடினர். நேற்று முன்தினம் இரவு, இறவாங்குடி பகுதியில் சுற்றித்திருந்த நபரை சந்தேகத்தில் போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர், கடலுார் மாவட்டம், பழஞ்சநல்லுார் காலனி தெருவைச் சேர்ந்த ஜோதி என்பதும், நிர்வாணமாக வீட்டிற்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.மேலும், துாங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. ஜோதியை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.