சென்னை : கோடை விடுமுறையொட்டி மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை துவங்கி உள்ளதால், பெரும்பாலான மக்கள் வெளியூர், சுற்றுலா பயணம் மேற்கொள்வர். சென்னையில் வசிப்போரும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவோரும் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், வண்டலுார் பூங்கா, மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை காண செல்வர். எனவே, பயணியர் தேவை மிக்க வழித்தடங்களில் கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கோடை விடுமுறையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, வண்டலுார் பூங்கா, மாமல்லபுரம், கோவளம், கிண்டி சிறுவர் பூங்கா, தனியார் சுற்றுலா மையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர வசதியாக 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜூன் மாதம் முதல் வாரம் வரை, சிறப்பு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்அதுபோல், கோடை வெயிலில் ஏற்படும் தாகத்தை போக்கிட, மாநகர போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மண் பானையில் குடிநீர், மோர் ஆகியவை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.பிராட்வே, தி.நகர், திருவான்மியூர், அடையார், திருவொற்றியூர் உள்ளிட்ட 70 இடங்களில் இவை வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.