திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக, திருப்போரூர் விளங்குகிறது. இங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதமாக, மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இக்கோவிலில் நித்ய நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.இது தவிர, கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்க வாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.எனவே, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.கோவிலின் கிழக்கு புறத்தில், 16 கால் மண்டபம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், வெயில் மற்றும் மழை நேரத்தில், 16 கால் மண்டபத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர். மேலும், ஆதரவற்றோரும் அங்கு அமர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், மற்ற இடங்களை தவிர்த்து, 16 கால் மண்டபத்தின் உள்ளே இரு சக்கரவாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். இதனால், அங்கு அமரும் பக்தர் களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், இட நெருக்கடியும் ஏற்படுகிறது.எனவே, 16 கால் மண்ட பத்தின் உள்ளே இரு சக்கரவாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.