23 கிலோ கஞ்சா பறிமுதல் 2 வாலிபர்களுக்கு காப்பு
சென்னை,வேப்பேரி போலீசார், நேற்று முன்தினம் இரவு, புரசைவாக்கம் தானா தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நம்பர் பிளேட் இல்லாமல் வந்த பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர்.அதில், 12 கிலோ கஞ்சா இருந்ததும், கடத்தி வந்தது, திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த முருகன், 29, என்பதும் தெரிந்தது.அவரை கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.அதே போல், நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் மது விலக்கு போலீசார், பெரம்பூர், சிறுவள்ளூர் பகுதியில் கண்காணித்தனர். அப்போது, பையுடன் வந்த நபரை சோதனை செய்ததில், 10.63 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த ரவிக்குமார், 22, என்பதும், விசாகபட்டினத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று காலை சிறையில் அடைத்தனர்.