| ADDED : ஏப் 28, 2024 01:50 AM
திருப்போரூர்,:திருப்போரூர் பேரூராட்சி, 8வது வார்டில், பழமையான திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்னி வசந்த விழாவில், மகாபாரத சொற்பொழிவு, நாடகம், துரியோதனன் படுகளம், தீமிதி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த இரண்டு ஆண்டுகளாக கோவில் விமான கோபுரம், மண்டபம் உள்ளிட்டவற்றில் திருப்பணி மேற்கொண்டு, பணி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம், கடந்த மார்ச் 15ம் தேதி நடந்தது. அதில், கோவில் நிர்வாகத்தினர், உற்சவதாரர்கள், கிராமத்தினர் பங்கேற்றனர். இதில், ஜூன் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, கும்பாபிஷேகம் நடத்தும் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், கும்பாபிஷேக விழா சிறப்பாக நடத்த வேண்டும். அதற்கான அனைத்து பணிகளும் மேள்கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.