செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் எடுக்க, 56 பேர் விண்ணப்பித்துள்ளதாக, கனிமவளத் துறையினர் தெரிவித்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இதில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் தாலுகாவில், பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் எடுக்க, அரசு அனுமதி வழங்கியது. அதன்பின், மாவட்டத்தில் உள்ள 356 ஏரிகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி கனிமவளத் துறையினர், கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். இதற்கான அனுமதி வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, செய்யூர் தாலுகாவில் 26 பேர், மதுராந்தகம் தாலுகாவில் 22 பேர் என, மொத்தம் 48 பேர் விண்ணப்பித்துள்ளனர் என, கனிமவளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில், செய்யூர் தாலுகாவில் 10 பேர் மற்றும் மதுராந்தகம் தாலுகாவில் 11 பேர் என, 22 பேருக்கு, தாசில்தார்கள் அனுமதி வழங்கி உள்ளனர். மற்ற தாலுகாவில் இருந்து யாரும் விண்ணப்பிக்க வில்லை. இதையடுத்து, வண்டல் மண் எடுப்பது தொடர்பாக, கனிமவளத் துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.