| ADDED : மே 25, 2024 11:39 PM
செய்யூர்:செய்யூர் அருகே உள்ள ஆக்கினாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் 50; விவசாயி. ஹரிகிருஷ்ணனுக்கும், இவரது அண்ணன் கோதண்டு என்பவருக்கும், 55, கடந்த மூன்று ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வந்தது.கடந்த 22ம் தேதி காலை 8:00 மணிக்கு கோதண்டு, அவரது மகன்கள் கோவிந்தராஜ், 28, பொன்னம்பலம், 26, ஆகியோருடன் விவசாய நிலத்தில் வரப்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.அப்போது, வரப்பு வெட்டுவதில் கோதண்டுக்கும், அவரது தம்பி ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோதண்டு மற்றும் அவரது மகன்கள், ஹரிகிருஷ்ணனை கட்டையால் தலையில் பலமாக தாக்கினர்.இதில், ஹரிகிருஷ்ணன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். அக்கம பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்த செய்யூர் போலீசார், கோதண்டு, கோவிந்தராஜ் , பொன்னம்பலம் ஆகிய மூவரையும் கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த ஹரிகிருஷ்ணன், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, செய்யூர் போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.