சென்னை : தமிழகத்தின் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் வெப்ப அலை வீசுகிறது. இதில் வயதானோர், கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்படுகின்றனர்.இதனால், பகல் துவங்கி மாலை வரை வெளியில் வர வேண்டாம் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வெப்ப பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை, ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஐந்து படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மீஞ்சூர் பகுதியில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரைச் சேர்ந்த வேலு, 35, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின், 25, உள்ளிட்டோர் கட்டட பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று வேலுவும், சச்சினும் வெயிலில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சச்சின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் உடல் சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்டது. வெப்ப அலையால் வடமாநில தொழிலாளி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி:
பூந்தமல்லியில் நடைபெறும் மேட்ரோ ரயில் பாலம் அமைக்கும் பணியில், வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.நேற்று முன்தினம் மேட்ரோ பணி நடக்கும் இடத்தில், 40 வயது மதிக்கத்தக்க வடமாநில தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார். தகவலின்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பூந்தமல்லி போலீசார், உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதல்கட்ட விசாரணையில், இவர் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடவில்லை என தெரிந்தது.இவர் யார்? கோடை வெப்பத்தில் சுருண்டு விழுந்து இறந்தாரா, வேறு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.