உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜமீன்எண்டத்துார் கூட்டுறவு சங்கத்தில் பயனின்றி வீணாகும் அறுவடை இயந்திரம்

ஜமீன்எண்டத்துார் கூட்டுறவு சங்கத்தில் பயனின்றி வீணாகும் அறுவடை இயந்திரம்

சித்தாமூர் : சித்தாமூர் அருகே ஜமீன்எண்டத்துார் கிராமத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.இங்கு, ஒழவெட்டி, மேலகண்டை, மருவளம், நெட்ரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக, விவசாய கடன், நகை கடன், கால்நடை கடன் வழங்கப்பட்டு, விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.ஜமீன்எண்டத்துார் சுற்றுவட்டாரப் பகுதியில், பெரும்பாலான விவசாயிகள், அதிக அளவில் நெல் பயிரிடுவது வழக்கம். அறுவடை நாட்களில் வேலையாட்கள் கிடைக்காமல், அதிக விலைக்கு தனியார் நெல் அறுவடை இயந்திரம் வாயிலாக அறுவடை செய்து வந்தனர்.இதனால், விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு சங்கம் வாயிலாக குறைந்த விலையில் அறுவடை செய்ய, நெல் அறுவடை இயந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டது.அதன்பின், 10 ஆண்டுகளுக்கு முன், ஜமீன்எண்டத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், நெல் அறுவடை இயந்திரம் வாங்கப்பட்டது.இதன் வாயிலாக, குறைந்த விலையில் நெல் அறுவடை செய்து, அப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.சில ஆண்டுகளுக்கு முன், நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, அறுவடை இயந்திரம் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பயன்படுத்தப்படாமல் ஒரே இடத்தில் நெல் அறுவடை இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இயந்திரம் பழுதடைந்து, துருப்பிடித்து, டயர்கள் வெடித்து, வெயிலிலும், மழையிலும் மட்கி வீணாகி வருகிறது.இதனால், அப்பகுதிவாசிகள் மீண்டும் அதிக விலைக்கு தனியார் நெல் அறுவடை இயந்திரம் வாயிலாக அறுவடை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், நெல் அறுவடை இயந்திரத்தை பழுது நீக்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை