| ADDED : ஜூன் 23, 2024 07:55 AM
சென்னை : சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில், 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சில மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களில், போதுமான வசதி இல்லை.எனவே, வழக்கமான பயணியருக்கு வாகன நிறுத்தும் இடத்தை வழங்கும் விதமாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.அந்த வகையில், திருமங்கலம், விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே புதிய வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:திருமங்கலம், விமான நிலையம் ஆகிய இரண்டு மெட்ரோ நிலையங்களில், பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, வாகன நிறுத்தும் வசதி மேம்படுத்தப்படுகிறது.விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில், வாகன நிறுத்தும் வசதி, ஜூலை மாதம் தயாராகி விடும். திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் வாகன நிறுத்தும் வசதியும், இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிடும்.இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, கையகப்படுத்தப்பட்ட இடம், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அமைக்கப்பட்ட திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பயன்படுத்தப்படும்.விமான நிலையம் மெட்ரோ நிலையத்தில் 500 மீட்டர் அப்பால், புதிய வாகன நிறுத்தும் பகுதி இடம் பெறும். இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே இடம்பெறவுள்ள வாகன நிறுத்தங்களில் பகுதிகளில் 1,600 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.