கூவத்துார்:செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அருகே கடலுார் ஊராட்சிக்குட்பட்ட வேப்பஞ்சேரி கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.வேப்பஞ்சேரி, தத்திரம்பேட்டை, கடலுார் காலனி, கூனியாமேடு உள்ளிட்ட ஆறு கிராம மக்களுக்கு, அப்பகுதியில் அமைந்துள்ள பாலாற்றில் கிணறு அமைத்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு ஏற்றப்பட்டு, பல ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் மூடி இல்லாத காரணத்தால், குடிநீர் மாசடைந்து, பாசி படிந்து காணப்படுகிறது.இதனால், பல மாதங்களாக, இப்பகுதி கிராம மக்களுக்கு கருப்பு நிறத்தில், மாசடைந்த சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, கடலுார் ஊராட்சி தலைவி ஆதிலட்சுமி கூறியதாவது:பாலாற்றின் குறுக்கே வாயலுாரில் தடுப்பணை கட்டப்பட்டு, தொடர்ந்து தண்ணீர் தேங்கி இருப்பதால், பாலாற்றில் உள்ள கிணறுகளின் தண்ணீர் கருப்பு நிறத்தில் மாறி வருகிறது.இதனால், பாலாற்றங்கரையில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து, 9 லட்சத்து 95,000 ரூபாய் மதிப்பீட்டில், புதிய கிணறு அமைக்கப்பட்டது.குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, ஏப்., மாதம் பயன்படுத்தப்பட்டது. கிணற்றில் உள்ள நீர், ஒருநாள் பயன்பாட்டிற்கு கூட போதுமானதாக இல்லை. ஆகையால், கிணறை மேலும் ஆழப்படுத்தும் பணி நடக்க உள்ளது.மேலும், மூன்று மாதங்களுக்கு முன், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கிணறு அமைக்க 'டெண்டர்' விடப்பட்டு, தற்போது வரை பணி துவங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.இரண்டு கிணறுகளும் அமைக்கப்பட்டு, விரைவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.