திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் சிட்கோ தொழிற்பேட்டையில், உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:ஆலத்துாரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.கடந்த 1982ம் ஆண்டு, இந்த சிட்கோ தொழிற்பேட்டை உருவாக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது, உள்ளூர் மக்களுக்கும், படித்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. ஆனால், சிட்கோ ஆரம்பித்து, 42 ஆண்டுகள் கடந்தும், ஆலத்துார் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.தொழிற்சாலை நிர்வாகத்தினர், பிற மாநிலம், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதில் தான் அக்கறை காட்டுகின்றனர்.உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை இல்லை. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு தொழிற்சாலைகளை அணுகினாலும், பல்வேறு காரணங்களை கூறி நிராகரிக்கப்படுகின்றனர்.இதனால், இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவு பறிபோய் உள்ளது. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள், சமூக மேம்பாட்டு நிதியின் கீழ், ஆலத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.சிட்கோ வளாகத்தில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும், இரவு நேரங்களில் தொழிற்சாலைகளில் இருந்து அதிகப்படியான நச்சுப்புகை வெளியேற்றப்படுவதால், சுவாச கோளாறு ஏற்படுகிறது.சிட்கோ தொழிற்சாலைகளிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், எவ்வித மறுசுழற்சியும் இன்றி நேரடியாக பகிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது.மேற்குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு, உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.