உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில் நிலத்தில் கால்வாய் அமைப்பு இழப்பீடு கேட்கும் அறநிலைய துறை

கோவில் நிலத்தில் கால்வாய் அமைப்பு இழப்பீடு கேட்கும் அறநிலைய துறை

சேலையூர், : ராஜகீழ்ப்பாக்கம் - மாடம்பாக்கம் சாலையில், கோவில் நிலத்தில் அனுமதி பெறாமல், அத்துமீறி மழைநீர் கால்வாய் கட்டிய நெடுஞ்சாலைத் துறையின் செயலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்கக் கோரி கடிதம் எழுத, ஹிந்து அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.தாம்பரம் -- வேளச்சேரி சாலையில், ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் இருந்து பிரிந்து செல்கிறது, ராஜகீழ்ப்பாக்கம் - மாடம்பாக்கம் சாலை. இது, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையை இணைப்பதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டிப்பர், ஜல்லி லோடு லாரிகள், வேன், கார் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.சாலையை ஒட்டியுள்ள பகுதிகள், சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சியடைந்து வருவதாலும், போக்குவரத்து அதிகரித்து விட்டதாலும், விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக இருந்து வந்தது.இதையடுத்து, ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் இருந்து, கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் வரை, சாலை விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த 2022ல் துவங்கி, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.இச்சாலையில், மழைநீர் கால்வாய் கட்டும் பணியும் நடந்து வருகிறது. பொதுவாக, முக்கியமான சாலையில் மழைநீர் கால்வாய் கட்டும் போது, வளைவு இல்லாமல் நேராக கட்டினால் மட்டுமே, மழைக்காலத்தில் தண்ணீர் தடையின்றி ஓடும்.வளைத்து வளைத்து கட்டினால், அடைப்பு ஏற்பட்டு, வரும் வேகத்தில் தண்ணீர் தடைபட்டு, வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்து விடும். ராஜகீழ்ப்பாக்கம் - மாடம்பாக்கம் சாலையில், இதையெல்லாம் யோசிக்காமல், வளைத்து வளைத்து கால்வாய் கட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து கேட்டால், பட்டா இடம் என்கின்றனர். இது ஒருபுறம் என்றால், கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே தேனுபுரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், அத்துமீறி கால்வாய் கட்டப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என்றாலும், அத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது கூட, நெடுஞ்சாலைத் துறையினருக்கு தெரியாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், தங்கள் நிலத்தில் அத்துமீறி கால்வாய் கட்டியுள்ளதை அறிந்த கோவில் நிர்வாகம், கோவில் நிலத்தில் இனி பணி செய்யக்கூடாது என, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், அனுமதி பெறாமல் கட்டியதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கோவில் நிலத்தில் அனுமதி பெறாமல் கால்வாய் கட்டுவதற்கு அரசாணை இருந்தால், அதை வழங்கும்படியும், நெடுஞ்சாலைத் துறைக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடிதம் எழுத முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது,'கோவில் நிலத்தில் அனுமதி பெறாமல் கால்வாய் கட்டியுள்ளனர். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் எழுத உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி