சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ஊராட்சி, மெய்யூர் மரத்தோட்டம் பகுதியில், இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். கூலித்தொழில் செய்யும் இவர்கள், குடிசையில் வசித்து வந்தனர்.ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா 2.5 சென்ட் இலவச நிலம் வழங்கப்பட்டு, துவக்கத்தில் 15 பேருக்கு, அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன.பிறர் குடிசையிலேயே வசித்து வந்தனர். 2014 சுனாமி பாதிப்பைத் தொடர்ந்து, தண்டரை இருளர் பழங்குடி பெண்கள் அமைப்பு, 17 பேருக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுத்தது.இவ்வீடுகள் தரமாகஇல்லாததால், முற்றிலும் சீரழிந்தன. அவர்கள், பல ஆண்டுகளாக, அவ்வீடுகளில் அபாயகரமான சூழலில் வசித்தனர். கனமழையில் பல வீடுகள் இடிந்தன.தற்போது, 70 குடும்பத்தினர் வசிக்கும் நிலையில், அனைவருக்கும் வீடுகள் இன்றி தவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை காலத்தில், வருவாய்த்துறை நிர்வாகம், தற்காலிக முகாமில் தங்கவைத்து, தன் கடமையை முடித்துக் கொள்கிறது.அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா, மூதாதையர் பெயரில் இருந்ததால், வாரிசுதாரர் பெயரில் மாற்று மாறு, வருவாய் துறையிடம் முறையிட்டும்,கிடப்பில் போடப்பட்டது.அவர்களின் பாதிப்புகள், அவலநிலை குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. பழங்குடியினர் குடியிருப்பு திட்டத்தின்கீழ், தற்போது புதிய வீடுகள் கட்டப்படுகின்றன.இதுகுறித்து, வட்டார வளர்ச்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:பழங்குடியினர் குடியிருப்பு திட்டத்தின்கீழ், முதல் கட்டமாக, தலா 4.30 லட்சம் ரூபாய் மதிப்பில், 16 வீடுகள் கட்ட முடிவெடுத்து, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மற்றவர்களுக்கும், அடுத்தடுத்து வீடுகள் கட்டப்படும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.