செங்கல்பட்டு:செங்கல்பட்டு தாலுகாவில், உங்களைத் தேடி; உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றில் கலெக்டர் அருண்ராஜ் தலைமையிலான அனைத்து துறை அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.இதில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அவரச சிகிச்சை பிரிவு, கண் மருத்துவமனை, இருதய சிகிச்சை பிரிவு, மாணவர் விடுதி உள்ளிட்ட பகுதிகளை, கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். அதன்பின், மருத்துவமனை வார்டுகளில் உள்ள கழிப்பறை பராமரிப்பு, வளாகத்தில் குப்பை அகற்றம் உள்ளிட்டவற்றில், மருத்துவமனை நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என, ஆலோசனை கூறினார்.அதன்பின், அனுமந்தபுத்தேரியில் உள்ள ரேஷன் கடையில், கருவிழிஇயந்திரங்கள் வாயிலாக பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கும் முறை பற்றி ஆய்வு செய்தார்.செங்கல்பட்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டட கட்டுமான பணியை ஆய்வு செய்து, தரமற்ற கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்துவதை அறிந்து, அதிகாரிகளை கண்டித்தார்.கட்டுமான பணிகளை, நகராட்சி கமிஷனர் மற்றும் பொறியாளர்கள் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.நகராட்சி கட்டடத்தில் இயங்கும் தனியார் உணவகத்தை ஆய்வு செய்து, சமையல் அறை, பொருட்கள் வைக்கும் அறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது கண்டு, அந்த உணவக உரிமையாளருக்கு அபராதம் விதிக்க, உணவு பாதுகாப்புதுறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.பரனுார் அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு செய்த அவர், வாரந்தோறும் நோயாளிகளை, திருமணியில் உள்ள மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.